டெங்கு நோயை தடுப்பதற்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன.... அமைச்சர் மா. சுப்பிரமணியன்

டெங்குவால் தமிழ்நாட்டில் இதுவரை 342 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், டெங்கு நோயை தடுப்பதற்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

டெங்கு நோயை தடுப்பதற்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன.... அமைச்சர் மா. சுப்பிரமணியன்

சென்னை தி.நகரில் உள்ள பி.டி.தியாகராய அரங்கில், கட்டுமான உரிமையாளர்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிகர்களுடன் டெங்கு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் எழிலன், கருணாநிதி, பிரபாகர் ராஜா, வணிகர் சங்க பேரமைப்பின் நிர்வாகிகள் விக்கிரமராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.  

பின்னர் பேசிய மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் கூறியதாவது, தமிழகத்தில் இதுவரை 67% பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்  என்றும் இந்த எண்ணிக்கை, 10-15 நாட்களில் 70 சதவீதத்தை தொடும் எனவும் தெரிவித்தார். தற்போது வரை தமிழகத்தில் 24 % பேர் தான் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுள்ளனர் என்று கூறினார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கேரள எல்லையிலும் டெங்கு ஒழிப்பு பணியை ஆய்வு செய்து வருவதாகவும், தமிழ்நாட்டில் டெங்குவால் 342 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார்.

மேலும் தமிழகத்தில் வரும் வாரம் பண்டிகை காலம்  என்பதால் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது எனவும் அடுத்து வரும் வாரத்தில் தடுப்பூசி கையிருப்பு பொறுத்து அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.