நீட் தேர்வு நடைபெறுமா? நடைபெறாதா? மாணவர்கள் தயாராக வேண்டுமா? வேண்டாமா? எடப்பாடி பழனிசாமி கேள்வி...
இந்த ஆண்டு தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடைபெறுமா? தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தைப் பொறுத்தவரை அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவக்கல்வி கனவை நிறைவேற்ற, நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் அனைவரது நிலைப்பாடு என்று தெரிவித்துள்ளார்.
கடந்த சட்டமன்ற தேர்தல் தேர்தல் பிரச்சாரத்தின் போது, திமுக ஆட்சி அமைத்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தமிழக மாணவர்களுக்கு வாக்குறுதி அளித்தது என நினைவு கூர்ந்துள்ள எடப்பாடி பழனிசாமி, தற்போது ஆட்சிப் பொறுப்பேற்றதும், இதற்காக அமைக்கப்பட்ட ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு பரிந்துரைகளின் மீது மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என கூறுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், இந்தாண்டு நீட் தேர்வு நடக்குமா? மாணவர்கள் அதற்கு தயாராக வேண்டுமா? என சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பியதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரடி பதில் அளிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், நடப்பாண்டில் தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெறுமா? நடைபெறாதா? என்ற குழப்பம், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளதாகவும், தேர்வுக்கு தயாராவதா? வேண்டாமா? என புரியாமல் தவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி மத்திய அரசு நீட் தேர்வை நடத்தியே தீரும் என்று அகில இந்திய மருத்துவக் கல்விக் கழகம் அறிவித்துள்ளதால், ஏ.கே.ராஜன் குழு பரிந்துரைகள் வருவதற்கு முன்பு, தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்பதா? வேண்டாமா? என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.