போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதற்கு அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்வேறு பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சியை பிடித்த மு.க.ஸ்டாலின், எதிர்கட்சியாக இருக்கும்பொழுது ஒரு பேச்சு, ஆளும் கட்சியான பிறகு மற்றொரு பேச்சு என்ற கொள்கையை கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டி உள்ளார். 2021ம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது திமுக வெளியிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி அமைதியான முறையில் போராடி வந்த ஆசிரியர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் வலுக்கட்டாயமாக கைது செய்ததை வன்மையாக கண்டிப்பதாக அவர் கூறியுள்ளார்.
100 சதவீதம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக சிறு தயக்கம் கூட இல்லாமல் பொய்யை கூறி ஏமாற்ற முயற்சிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்வதுடன், ஆசிரியர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.