"24 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்" எடப்பாடி பழனிச்சாமி எச்சரிக்கை!

முதலமைச்சரின் அக்கறையின்மை காரணமாக தமிழகத்தில் 24 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி இருப்பதாக அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார்.
 
சிறுபான்மை மக்களின் எதிர்பார்ப்பை அதிமுக நிறைவேற்றி இருப்பதாகவும், வாக்கு அரசியல் செய்யாமல் சிறுபான்மை மக்களின் பக்கம் அதிமுக தொடர்ந்து நிற்கும் என்றும் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
 
சேலம் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் அஸ்தம்பட்டி பகுதி பூத் கமிட் உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். 
 
அப்போது பேசுகையில், காலத்திற்கேற்றவாறு தேர்தல் பணியாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் பூத் கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளது. தலைமை அறிவிக்கும் வேட்பாளர் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளரை வெற்றி பெற வைக்கும் வகையில் பூத் கமிட்டி உறுப்பினர்களின செயல்பாடுகள் அமைய வேண்டும். ஒரு கட்டடத்திற்கு அஸ்திவாரம் போல, கட்சிக்கு பூத் கமிட்டி உறுப்பினர்களின் பணிகள் முக்கியமானது. தேர்தல் நேரத்தில் வாக்காளர்களை அழைத்து வருவது, பூத் ஏஜெண்ட் பணி செய்வது, கள்ள ஓட்டை தடுப்பது, புதிய வாக்காளர்களை சேர்ப்பது போன்ற பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். பூத் கமிட்டி உறுப்பினர்களின் சிறப்பான பணி வேட்பாளருக்கு ஆதரவாக அமையும்.
 
கடந்த இரண்டரை வருட கால திமுக ஆட்சியின் அவலங்களை வாக்காளர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் வெறும் 10 சதவீத வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றி விட்டு, 95 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் பச்சைப் பொய் சொல்கிறார். திமுக ஆட்சியில் நிறைவேற்றாத வாக்குறுதிகள் குறித்து புள்ளி விவரங்கள் அடங்கிய கையேடு பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்.
 
இந்த தேர்தல் வழக்கமான தேர்தல் போல அல்ல. சவாலான தேர்தலாக அமையும். அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் எனில் கடுமையான உழைப்பை வெளிப்படுத்தி அதற்கு உறுதுணையாக நிற்க வேண்டும். அனைத்து வாக்குகளும் சிந்தாமல் சிதறாமல் அதிமுகவிற்கு கிடைக்கும் வகையில் செயல்பட வேண்டும். சிறுபான்மை மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நாங்கள் நடந்து கொண்டுள்ளோம். சிறுபான்மை மக்களை கண்ணை இமை காப்பது போல பாதுகாப்பதில் அதிமுக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் வாழ்கின்ற அனைத்து சிறுபான்மை மக்களுக்கும் அதிமுக பாதுகாப்பாக துணை நிற்கும். இதை அனைத்து சிறுபான்மையினரிடத்திலும் கொண்டு சேர்க்க வேண்டும்.
 
திராவிட மாடல் என்று மக்களை ஏமாற்றி வரும் திமுக அரசின் தவறுகளை புள்ளி விவரத்துடன் எடுத்துரைக்க வேண்டும். தேர்தல் வரும்போது மட்டும் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து திமுக பொதுமக்களை ஏமாற்றி வருகிறது. ஆனால் அதிமுக கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியதுடன் கொடுக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளது. 52 லட்சம் மாணவர்களுக்கு அதிமுக ஆட்சியில் மடிக்கணினி வழங்கப்பட்டது. ஆனால் இதுபோன்ற நல்ல திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் காழ்ப்புணர்ச்சி காரணமாக நிறுத்தி விட்டார். 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு காரணமாக அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 2160 மாணவர்கள் கடந்த 4 ஆண்டுகளில் மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பை அதிமுகதான் உருவாக்கியது எனக் கூறினார்.
 
தொடர்ந்து பேசிய அவர், மேட்டூர் அணையில் தற்போது நீர்மட்டம் 36 அடிதான் உள்ளது. இன்னும் 6 அடி குறைந்தால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். இது சேலம் மாவட்டத்திற்கு மட்டுமானது அல்ல. தமிழகம் முழுவதும் 24 மாவட்டங்கள் மேட்டூர் அணை மற்றும் காவிரி நீரை குடிநீருக்காக நம்பி உள்ளன. ஆனால் இது எதைப்பற்றியும் கவலைப்படாமல் முதலமைச்சர் தூங்கிக் கொண்டிருக்கிறார். அவருக்கு அவருடைய மகன் தனக்கு அடுத்து பதவிக்கு வரவேண்டும் என்பதே முக்கியமாக உள்ளது. அடுத்து 7 மாதங்களுக்கு பிறகுதான் மேட்டூர் அணைக்கு பருவமழையால் தண்ணீர் கிடைக்கும். தற்போது நீர்மட்டம் வேகமாக குறைந்து வரும் நிலையில் மிகப் பெரிய குடிநீர் பஞ்சம் ஏற்படும் வாய்ப்புள்ளது. நான் சொன்னதுக்கு பிறகாவது திமுக அரசு நடவடிக்கை எடுக்கிறதா? என பார்க்க வேண்டும். தண்ணீர் இல்லாமல் எப்படி சமாளிக்க முடியும். ஏற்கனவே சட்டம் ஒழுங்கு பிரச்சினை எங்கு பார்த்தாலும் போதைப் பொருள், கஞ்சா விற்பனை நடைபெற்று வரும் நிலையை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அதிமுகவை பொறுத்தவரை மக்கள்தான் எஜமானர்கள். மக்கள் நினைப்பதை தொடர்ந்து செயலாற்றி வருகிறோம் என்று அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசினார். 

இதையும் படிக்க: "சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்க இட ஒதுக்கீடு கொள்கை பொருந்தாது "-உயர் நீதிமன்றம்!