தமிழ்நாடு முழுவதும் பட்டாசுக் கழிவுகள் அகற்றும் பணி தீவிரம்!

தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையின் போது வெடிக்கப்பட்ட பட்டாசுகளின் ஏற்பட்ட குப்பைகளை அகற்றும் பணியில் உள்ளாட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சியில் உள்ள ஐந்து மண்டலங்களிலும் பட்டாசு குப்பைகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பம்மல், பல்லாவரம், செம்பாக்கம், தாம்பரம், பெருங்களத்தூர் உட்பட ஐந்து மண்டலங்களிலும் ஆயிரத்து 600 தூய்மை பணியாளர்களும் 325  வாகனங்களுடன் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுவரை 30 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் இரண்டாவது நாளாக குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன. நேற்று மட்டும் வழக்கத்தை விட கூடுதலாக 250 டன் குப்பைகள் சேர்ந்து மொத்தம் ஆயிரத்து  350 டன் குப்பைகள் சேர்ந்துள்ளன.  சிலர் விடுப்பில் சென்றுள்ளதால் குப்பைகளை அகற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் நாளை அனைத்து பணியாளர்கள் வந்த பின்னர் அனைத்து பகுதிகளிலும் குப்பைகள் அகற்றப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிவகங்கை நகராட்சியில் குவிந்துள்ள கழிவுகளை அகற்றும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 27 வார்டுகளிலும் தேங்கியுள்ள வெடிக்கப்பட்ட பட்டாசு கழிவுகள், அட்டைப் பெட்டிகள் மற்றும் குப்பைகளை அகற்றும் பணியில் நிரந்தர மற்றும் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.