அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி; அங்கீகரித்த தேர்தல் ஆணையம்!

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி; அங்கீகரித்த தேர்தல் ஆணையம்!

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. மேலும் எடப்பாடி பழனிசாமி நியமித்த நிர்வாகிகளையும் இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. 

அதிமுக உட்கட்சி தேர்தல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி முதல் ஏப்ரல் 25 ஆம் தேதி வரை உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் உட்பட பல்வேறு பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.

இதனிடையில் அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனையால் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து பொதுக்குழு கூடி கட்சியின் சட்ட விதிகளில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை இணைத்து  திருத்தம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு, ஒருங்கிணைப்பாளராக இருந்து ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். 

அதைத் தொடர்ந்து பொதுக்குழு மற்றும் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓ.பி.எஸ் தொடர்ந்த வழக்குகளில், சென்னை உயர் நீதிமன்றம் பொதுக்குழு மற்றும் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என உத்தரவு அளித்ததையடுத்து அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றார். 

இதையடுத்து ஜுலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு மற்றும் தீர்மானங்களுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் தொடர்ந்த மேல் முறையிட்டு வழக்கு விசாரணையில் இருந்து வரும் நிலையில், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியையும் அதிமுக பொதுக்குழு மற்றும் தீர்மானங்களுக்கும் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியது. 

இந்நிலையில், உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நியமித்த நிர்வாகிகளையும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்து, ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றியுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com