உரிமைத் தொகை திட்டம்: விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்ய திண்டுக்கலில் பயிற்சி முகாம்...!

உரிமைத் தொகை திட்டம்:   விண்ணப்பங்களை  ஆன்லைனில்  பதிவு செய்ய திண்டுக்கலில்  பயிற்சி முகாம்...!

திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி மற்றும் ஒட்டன்சத்திரத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்வதற்கான பயிற்சி முகாமில் 200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள்,  பொதுமக்கள் பங்கேற்பு.

 திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் தமிழக அரசு வருகின்ற செப்பம்பர் 15-ம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 வழங்க உள்ளது. இந்த உரிமைத் தொகையை பெறுவதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 20-ம் தேதி முதல் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களை பெற்று அதனை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்வது குறித்து தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம் ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் முத்துச்சாமி தலைமையில் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில் மகளிர் சுய உதவி குழு, இல்லம் தேடி கல்வி திட்டம் மற்றும் தன்னார்வ பெண்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். 

மேலும் இந்த பயிற்சி முகாமில் வட்ட வழங்கல் அலுவலர் பிரசன்னா, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் சத்துணவு சுரேஷ், மகளிர் திட்ட மேலாளர் சித்ராதேவி, இல்லம் தேடி கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் கீதா, தலைமையில் நடைபெற்றது. இதில், துணை வட்டாட்சியர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


இதேபோல், பழனியில் கலைஞர் உரிமைத்தொகை பெயர் பதிவு செய்வதற்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். வருகிற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று துவங்க உள்ள கலைஞர் உரிமை திட்டத்தில் குடும்ப‌ தலைவிகள் தங்களது பெயர் பதிவு செய்து கொள்ள அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பழனியில் வருவாய் துறை சார்பில் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணிபுரியும் பெண்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.

 
தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமில் கலைஞர் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை பதிவு செய்யும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் பயோமெட்ரிக் கருவியின் மூலம் கைரேகை பதிவு செய்வது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. பழனி வட்டாட்சியர் பழனிச்சாமி கிராம நிர்வாக அதிகாரிகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட இலங்கை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க    | தமிழக அரசு மதுவிலக்கு குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தத் தயாரா? ராமதாஸ் கேள்வி!