ரூ.29 லட்சம் மதிப்பில் 3ஆம் கட்ட அகழாய்வு.. வாழ்விடப் பகுதியில் "தங்கம்" கிடைத்ததால் ஆய்வாளர்கள் உற்சாகம்!!

ரூ.29 லட்சம் மதிப்பில் 3ஆம் கட்ட அகழாய்வு.. வாழ்விடப் பகுதியில் "தங்கம்" கிடைத்ததால் ஆய்வாளர்கள் உற்சாகம்!!

தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் நடந்து வரும் அகழாய்வு பணியில் சிறிய அளவிலான தங்கப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரூ.29 லட்சம் மதிப்பில் 3ஆம் கட்ட அகழாய்வு

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே சிவகளையில் கடந்த 2 ஆண்டுகளாக மாநில அரசு சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் மாதம் 29 லட்சம் ரூபாய் மதிப்பில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கின. சிவகளை, பரம்பு மற்றும் ஸ்ரீ மூலக்கரை பகுதியில் முன்னோர்களின் வாழ்விடப்பகுதிகளை கண்டறியும் பணிகள் நடைபெற்று  வருகின்றன.

20க்கும் மேற்பட்ட குழிகள்

இதற்காக 20க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடைபெற்று வருகிறது. அகழாய்வில் இதுவரை வட்ட சில்கள், தக்கிளி சாதனங்கள், புகைப்பான், ஆட்டக் காய்கள் உட்பட 80 தொல்லியல் பொருட்களும், 50க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தங்கம் கிடைத்ததால் ஆய்வாளர்கள் உற்சாகம்

தற்போது பராக்கிரமபாண்டி திரடு பகுதியில், தங்கத்தால் ஆன பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறு சிறு கோடுகள் உள்ள இந்த தங்கத்தாலான பொருள் என்ன என்பது குறித்து ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். சிவகளை அகழாய்வில் வாழ்விடம் பகுதியில் முதல் முறையாக தங்கம் கிடைத்துள்ளது ஆய்வாளர்களை உற்சாகமடைய செய்துள்ளது.