கனமழை காரணமாக, பூண்டி, செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளில் உபரி நீர் வெளியேற்றம்...

சென்னையில் விடிய விடிய பெய்து வரும் கனமழை காரணமாக, பூண்டி, செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

கனமழை காரணமாக, பூண்டி, செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளில் உபரி நீர் வெளியேற்றம்...

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில்  கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் முக்கிய ஏரியான, செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து 4 ஆயிரத்து 20 கனஅடியாக உள்ளது. அணையின் நீர் மட்டம் 20 புள்ளி 48 அடியாக உள்ளது.  அணையின் மொத்த கொள்ளளவு 2 ஆயிரத்து, 722 மில்லியன் கனஅடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து, வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் காற்று பலமாக வீசி வருவதால் ஏரிக்கரைகளில் கடல் போல அலை எழும்பி வருகிறது. 

புழல் ஏரிக்கு நீர் வரத்து, தொடர்ந்து, வினாடிக்கு 10 ஆயிரத்து, 690 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. அணையின் நீர் இருப்பு  2 ஆயிரத்து, 853 மில்லியன் கனஅடியாக உள்ளதால், அணையின் பாதுகாப்பு கருதி, உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.  2 ஆயிரம் கனஅடியில் இருந்து, 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், அணையின் சுற்றுவட்டாரப் பகுதிகளான,  நாரவாரிக்குப்பம், தண்டல்கழனி, வடகரை, கிராண்ட்லைன், புழல், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம், மாத்துர், கொசப்பூர், மணலி மற்றும் சடையான்குப்பம் ஆகிய பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.  

இதேபோன்று, பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பூண்டி நீர்த்தேக்கத்தில் நீர் இருப்பு  2 ஆயிரத்து, 450 மில்லியன் கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும் அணைக்கு நீர்வரத்து, 8 ஆயிரம் கனஅடியாக உள்ளதால், அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 6 ஆயிரம் கன அடியில் இருந்து, 7 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கொசஸ்தலை ஆறு,  மெய்யூர் ஆவாஜிபேட்டை, வெம்பேடு, செம்பேடு, வெங்கல், மாலந்தூர், எறையூர், மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. தாழ்வான பகுதியில் உள்ள  மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.