மெட்ரோ ரயில் பணிக்காக பள்ளம் தோண்டும் இயந்திரம் சாயும் நிலையில் இருப்பதால் பரபரப்பு..!

மெட்ரோ ரயில் பணிக்காக பள்ளம் தோண்டும் இயந்திரம் சாயும் நிலையில் இருப்பதால் பரபரப்பு..!

போரூரில் மெட்ரோ ரயில் பணிக்காக பள்ளம் தோண்டும்  இயந்திரம் சாலையின் நடுவில் சாயும் நிலையில் இருப்பதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

இதனால் சாலையை மறித்து ஒரு வழி பாதையாக மாற்றியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையடுத்து, 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலை உருவாகியுள்ளது. 

மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணி வடபழனியில் இருந்து பூந்தமல்லி வரை தீவிரமாக நடந்து வருகிறது. போரூரில் பில்லர்கள் அமைக்கும் பணி நடைபெறும் நிலையில் சில இடங்களில் பில்லர் அமைக்க துளை போடும் பணியும் நடந்து வருகிறது. போரூர் சிக்னலில் இருந்து வளசரவாக்கம் செல்லும் சாலையில் பூமியில் துளை போடும் எந்திரம் திடீரென  சாலையின் ஓரம் புதைக்கப்பட்டுள்ள கால்வாயில் ஒரு புறம் உடைத்துக் கொண்டு உள்ளே இறங்கியுள்ளது.

இதனால் ராட்சத இயந்திரம் சாலையின் நடுவில் கவிழ்ந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் சாலையில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகளின்  உயிருக்கு ஆபத்தான நிலையில், சாலையை கடந்து செல்லும் சூழல் ஏற்பட்டு வருகிறது இந்த நிலையில் தற்போது சாலையில் விழும் அபாயத்தில் உள்ள இயந்திரத்தை சீர் செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

போரூரில் இருந்து வளசரவாக்கம் செல்லக்கூடிய ஆற்காடு சாலையின் ஒரு புறத்தை இரும்பு தகடுகளால் மூடப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதால் வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலையில் அணிவகுத்து நிற்கின்றது. ராட்சத இயந்திரம் விழுந்தால் பெரும் விபத்து ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் நிர்வாகத்தினர் உரிய பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் பணிகளை செய்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதையும் படிக்க       | அரியலூர் - நாமக்கல் இடையே புதிய ரயில் பாதை!!