ஒருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க கோரிக்கை...மறுப்பு தெரிவித்த அரசு அதிகாரிகள்!

முல்லைப்பெரியாறு அணையில் ஒருபோக பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட கோரி மேலூர் விவசாயிகள் மேற்கொண்ட பேரணியில் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். 

மதுரை மாவட்டம் மேலூர் விவசாயிகள் முல்லைப்பெரியாறு அணையின் நீரை மட்டுமே நம்பி கடைமடை பகுதி வரை ஒருபோகம் விவசாயம் செய்து வருகின்றனர். செப்டம்பர் மாதத்தில் திறக்கப்பட வேண்டிய தண்ணீரை திறந்து விடக்கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது குறித்து உறுதிபட எந்த அறிவிப்பும் அதிகாரிகளிடமிருந்து வராததால் விவசாயிகள் இன்று கடையடைப்பு மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

யூனியன் அலுவலகத்தில் இருந்து என் உரிமை, என் தண்ணீர், என் வாழ்க்கை என்ற முழக்கங்களுடன் , பல்லாயிரக்கணக்கான விவசாயிகள்  பேரணியாக புறப்பட்டு நீர் வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

இதையும் படிக்க : திருவாரூரில் சோகம்: மின் தடையால் அரசு மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு!

நீர்வளத்துறை அதிகாரிகளிடம் நடத்திய பேச்சுவார்த்தையில், தண்ணீர் திறப்பது தொடர்பாக உரிய பதில் இல்லையென கூறி  மதுரை - திருச்சி நான்கு வழிச்சாலை நோக்கி மறியல் செய்ய ஆவேசத்துடன் விவசாயிகள் புறப்பட்டதால் தடுப்புகளை அமைத்து போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

விவசாயிகள் மேற்கொண்ட போராட்டத்தில் அதிமுக, அமமுக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், வழக்கறிஞர்கள் சங்கம், வியாபாரிகள் சங்கம் உள்ளிடட்ட பல்வேறு அமைப்புகளும் பங்கேற்று ஆதரவு தெரிவித்துள்ளன.