ரூ.1,500 கடனுக்காக தலித் பெண் சித்ரவதை; சிறுநீரை குடிக்க வைத்த தந்தை -மகன்!

Published on
Updated on
1 min read

கடன் தரவில்லை என்ற காரணத்துக்காக பெண்ணை தாக்கி சிறுநீரை குடிக்க வைத்த அவலம் அரங்கேறியுள்ளது. வெறும் 1,500 ரூபாய்க்காக நடந்த சகிக்க முடியாத சம்பவம் நடந்தேறியுள்ளது.

பீகார் மாநிலம் பாட்னா நகரில் வசித்து வருபவர்கள் பிரமோத் சிங் மற்றும் அவரது மகன் அன்ஷூ. தந்தை - மகனான இவர்கள் தங்கள் பணத்தை ஊரில் வட்டிக்கு விட்டு வரும் தொழிலை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த தலித் பெண் ஒருவர் பிரமோத் சிங்கிடம் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு 9000 ரூபாயை கடனாக வாங்கியுள்ளார். 9 ஆயிரம் ரூபாய்க்கு மாதம் 1,500 ரூபாய் வட்டி என விதிக்கப்பட்ட நிலையில் ஆரம்ப காலங்களில் அந்த வட்டி பணத்தை செலுத்தி வந்துள்ளார். 

ஆனால் சில மாதங்களாக வட்டி பணம் செலுத்தாததால் நான்கைந்து மாத வட்டித் தொகையும், அசல் தொகையும் கட்டப்படாமல் நிலுவையில் இருந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்து பிரமோத் சிங், பணத்தை வசூலிப்பதற்கு மகனுடன் சேர்ந்து கொடூரமான முடிவை எடுத்தனர். 

24-ம் தேதியன்று காலையில் குழாயில் நீர் எடுக்க சென்ற தலித் பெண்ணிடம் பிரமோத் சிங் வட்டிப் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அப்போது பணம் தருவதற்கு முடியாமல் அந்த பெண் தவித்த நிலையில், பிரமோத் சிங்கின் மகன் அன்ஷூ, ஆபாச வார்த்தைகளால் திட்டித் தீர்த்துள்ளார். 

இதையடுத்து பணம் தராததால் தந்தை - மகன் மேலும் 5 பேர் சேர்த்து அந்த பெண்ணை அடித்து நிர்வாணமாக்கினர். பின்னர் அவரை சுற்றி 6 பேரும் நின்று கொண்டு முகத்தில் சிறுநீர் கழித்து, அதனை குடிக்க செய்துள்ளனர். 

இந்த சம்பவம் பீகார் மாநிலத்தில் பீரங்கியாய் வெடித்த நிலையில் பா.ஜ.க. உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இதற்கு கண்டனம் விடுத்து வருகின்றனர். வெறும் 1,500 ரூபாய்க்காக நடந்த இந்த கேடு கெட்ட சம்பவம்  மக்களை வெறுப்பில் ஆழ்த்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com