லிஃப்டில் செல்ல...மா.சுப்பிரமணியனை கிண்டல் செய்யும் தமிழிசையின் பேச்சு...!

லிஃப்டில் செல்ல...மா.சுப்பிரமணியனை கிண்டல் செய்யும் தமிழிசையின் பேச்சு...!

லிஃப்டில் செல்வதற்கெல்லாம் தற்போது பயப்பட வேண்டிய நிலை உள்ளதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

செஸ் போட்டி:

சென்னை அடுத்த ஆவடி தனியார்ப் பள்ளியில் தமிழ்நாடு, புதுச்சேரி, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களை உள்ளடக்கிய தென் மண்டல அளவிலான சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு இடையேயான செஸ் போட்டி கடந்த நான்கு நாட்களாக நடைபெற்றன. இந்த போட்டியில் தெலுங்கானா மாநிலத்தின்  சங்கமித்ரா பள்ளி அணி முதலிடத்தையும்,  அம்பத்தூர், மதுரவாயல் வேலம்மாள் பள்ளி இரண்டாவது மூன்றாவது இடத்தையும் பிடித்தது.

பரிசுகளை வழங்கிய தமிழிசை:

இந்நிலையில்  செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  பரிசளிக்கும் விழா ஆவடி தனியார் பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில் புதுச்சேரி துணைநிலை ஆளுநரும், தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

இதையும் படிக்க: டிசம்பர் 7... மக்களே உஷார்...இந்திய வானிலை எச்சரிக்கை...!

தமிழிசை பேச்சு:

பின்னர் மேடையில் பேசிய ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், செஸ் விளையாட்டு போன்றுதான் வாழ்க்கையும், முன்னேறுவதற்கு சற்று பின்னோக்கி செல்ல வேண்டியது அவசியம் என்று கூறினார். சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஆனால் இங்கு நாம் அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொண்டதால் பாதுகாப்பாக இருக்கிறோம்.

லிஃப்டில் செல்வது கூட பாதுகாப்பு இல்லை:

தொடர்ந்து பேசிய அவர், விமானத்தில் சென்றால் பாதுகாப்பு இல்லை என தோன்றும், காரில் சென்றால் பாதுகாப்பு இல்லை என தோன்றும், ஆனால் தற்பொழுது லிஃப்டில் செல்வது கூட பாதுகாப்பு இல்லை என கூறிய தமிழிசை, என்ன வாழ்க்கை இது என எண்ண தோன்றுவதாக கூறியுள்ளார். தமிழிசையின் இந்த பேச்சு சுகாதார துறை அமைச்சர் சுப்ரமணியன் லிப்டில் சிக்கிகொண்டதை கிண்டல் செய்து பேசுவதாக அரசியல் வட்டாரங்களில் நிலவி வருகிறது.

முன்னதாக, கடந்த நவம்பர் 29 ஆம் தேதியன்று அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பல்வேறு திட்டங்களை உள்ளடக்கிய நிகழ்ச்சியின் தொடக்க விழாவிற்கு வருகை தந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், அறுவை சிகிச்சை துறை கட்டிடத்திற்கு செல்வதற்காக லிப்டில் பயணம் செய்யும்போது எதிர்பாராத விதமாக இயந்திர கோளாறு காரணமாக லிஃப்டில்  மாட்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.