தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை தவிர்க்க முடியாததாகி விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது - ஓ.பி.எஸ்.

கொரோனா மூன்றாவது அலையிலிருந்து தமிழக மக்களைக் காப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று, முதலமைச்சருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை தவிர்க்க முடியாததாகி விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது - ஓ.பி.எஸ்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கடந்த 3 தினங்களாகப் பதிவாகி வரும் கொரோனா பாதிப்புகளை பார்க்கும் போது, கொரோனா மூன்றாவது அலை தவிர்க்க முடியாததாகி விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, ஈரோடு, திருச்சி, நாமக்கல், தஞ்சாவூர் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்து வருவதை சுட்டிக்காட்டியுள்ள அவர், அரசு விதிக்கும் கட்டுப்பாடுகள் முறையாக நடைமுறைப்படுத்தாததே காரணம் எனக் கூறியுள்ளார்.

அதேசமயம் கேரளத்தில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், கேரளத்திலிருந்து கோவை, தேனி, கன்னியாகுமரி வழியாக தமிழ்நாட்டிற்குள் வருபவர்களை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளின்றி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதுடன், விதிமுறைகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறைக்கு தமிழக அரசு அறிவுரை வழங்கியுள்ளதையும், சென்னையில் 9 இடங்களில் கடைகள் செயல்படவும், சில வழிபாட்டுத் தலங்களில் தரிசனத்திற்கு தடை வித்தித்துள்ளதையும் ஓ.பி.எஸ். வரவேற்றுள்ளார்.

இருப்பினும், தடை விதிக்கப்படாத பகுதிகளில், பொதுமக்கள் சமூக இடைவெளி, முகக்கவசம் ஆகியவற்றை கடைப்பிடிப்பதோடு, கட்டுப்பாடுகளை தீவிரமாக கடைப்பிடிக்கப்படுவதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி செய்து, கொரோனா மூன்றாவது அலையிலிருந்து தமிழக மக்களைக் காப்பதற்கான நடவடிக்கைகளை  எடுக்க வேண்டும் என்று, ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.