வேலையை விட்டே தூக்கிவிடுவேன், முகக்கவசம் அணிய சொன்ன போலீசாரை தகாத வார்த்தைகளால் ஒருமையில் பேசி மிரட்டும் பெண் வழக்கறிஞர்...

சென்னை சேத்துப்பட்டு அருகே முகக்கவசம் அணியாமல் வந்த பெண்ணுக்கு அபராதம் விதித்ததால் ஆத்திரமடைந்த பெண்ணின் தாயார் போக்குவரத்து போலீசாரை தகாத வார்த்தையால் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வேலையை விட்டே தூக்கிவிடுவேன்,  முகக்கவசம் அணிய சொன்ன  போலீசாரை தகாத வார்த்தைகளால் ஒருமையில் பேசி மிரட்டும் பெண் வழக்கறிஞர்...

சேத்துப்பட்டு சிக்னலில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சொகுசு காரில் முகக்கவசம் அணியாமல் வந்த இளம்பெண்ணை நிறுத்திய போக்குவரத்து போலீசார், அவருக்கு 500 ரூபாய் அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து இளம்பெண் தனது தாயாருக்கு தொலைபேசி மூலம் தகவல் அளித்துள்ளார். இந்நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த அப்பெண்ணின் தாயார், தான் ஒரு வழக்கறிஞர் என்றும், போலீசாரை வேலையை விட்டே தூக்கிவிடுவேன் எனவும் கூறி மிரட்டியுள்ளார்.  

இதனிடையே அவரிடம் போலீசார் முகக்கவசம் அணிய வலியுறுத்திய நிலையில் மேலும் ஆத்திரமடைந்த அவர், தகாத வார்த்தைகளால் ஒருமையில் பேசி மிரட்டியுள்ளார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுதொடர்பாக கார் எண்ணை கொண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.