வெண்பனி போல் சாலையை மூடிய வெண் புகை...உடனடியாக வரவழைக்கப்பட்ட ஆம்புலன்ஸ்!

வெண்பனி போல் சாலையை மூடிய வெண் புகை...உடனடியாக வரவழைக்கப்பட்ட ஆம்புலன்ஸ்!
Published on
Updated on
2 min read

செங்குன்றம் அருகே  ரசாயன கிடங்கில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டு, வெண்புகை வெளியேறியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த கிராண்ட்லைன் கண்ணியம்மன் கோயில் தெருவில் ராதாகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான பிளீச்சிங் ரசாயன கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் கடந்த 27-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. 3 தீயணைப்பு வாகனங்கள் ஒன்றிணைந்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அத்துடன் ரசாயன பொருட்களை மண்ணைக் கொண்டு மூடியுள்ளார்.

இந்நிலையில், நேற்று பெய்த மழையில், மண்ணில் மூடிவைத்திருந்த அமோனியா மீது மழை நீர் பட்டவுடன் எரியத் தொடங்கியுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் வெண் புகை சூழ்ந்தது. பாயசம்பாக்கம், விளாங்காடு பாக்கம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த மக்களுக்கு, கண் எரிச்சல், மூச்சுத் திணறல், தொண்டை கரகரப்பு போன்ற உபாதைகள் ஏற்பட்டதால், உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. 

பின்னர் இது பற்றி விவரம் அறிந்து வந்த மாதவரம் மற்றும் செங்குன்றம் தீயணைப்புத் துறையினர் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து ரசாயன பொருட்கள் வைத்திருந்த பொருட்களை ஆழமான பள்ளம் தோண்டி அதில் போட்டு மூடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனாலும், தொடர்ந்து புகைமூட்டம் காணப்படுவதால் அப்பகுதி முழுவதும் வெண்பனி போல் படர்ந்து சாலைகள் தெரியாத வண்ணம் உள்ளது. மேலும், இந்த திடீர் தீ விபத்து பற்றி செங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெகநாதன், வழக்கு பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com