பவானி ஆற்றின் கரையோரம் வெள்ள எச்சரிக்கை... தண்டோரா மூலம் அறிவிப்பு...

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் அதிகரித்து வரும் நிலையில் அணையில் இருந்து உபரிநீர் எப்போது வேண்டுமானாலும் திறக்க வாய்ப்புள்ளதால்  பவானி ஆற்றின் கரையோர கிராமங்களில் தண்டோரா மூலமாக வருவாய்த்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பவானி ஆற்றின் கரையோரம் வெள்ள எச்சரிக்கை... தண்டோரா மூலம் அறிவிப்பு...

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமான பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக மாயாற்றில் தண்ணீர் அதிகமாக வருவதாலும், பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தற்போது 101.90 அடியாக உயர்ந்துள்ளது.

தற்போது அணைக்கு வினாடிக்கு 2800 கன அடி தண்ணீர் வரத்து உள்ள நிலையில் அணையின் பாதுகாப்பு விதிகளின் படி நீர்மட்டம் 102 அடியை எட்டியதும் உபரி நீர் திறந்து விடப்படும். இதனால் பவானி ஆற்றின் கரையோர கிராமங்களில் வெள்ள அபாயம் ஏற்படும் என்ற நிலையில் கரையோர கிராமங்களில் தண்டோரா மூலமாக வருவாய்த்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அடசப்பாளையம்,கீழ்வாணி,மேவாணி,கொடிவேரி,நஞ்சை புளியம்பட்டி, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தண்டோரா மூலமாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வருவாய்துறையினரின் மறு அறிவிப்பு வரும்வரை பொதுமக்கள் பவானி ஆற்றங்கரைக்கு செல்ல கூடாது என்றும், கால்நடை மேய்ச்சல், துணி துவைத்தல் உள்ளிட்ட எதற்காகவும் ஆற்றுக்கு செல்ல கூடாது என தண்டோரா மூலமாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.