தொடர் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு.. மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் நேரில் ஆய்வு!!

தொடர் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு.. மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் நேரில் ஆய்வு!!

தொடர் மழையால் பல்வேறு மாவட்டங்களில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், சென்னை எழிலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறையின் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவின் கே.ஆர். எஸ்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கே.ஆர். எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 68 ஆயிரத்து 100 கனஅடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீரும் என மொத்தமாக வினாடிக்கு 83 ஆயிரத்து 100 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

அரசு முகாம்களில் மக்கள் பாதுகாப்பாக தஞ்சம்

ஒசூர், ஒகேனக்கல் பகுதிகளிலும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. தொடர் மழையால் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், தமிழக அரசின் நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் ஆய்வு

இந்நிலையில், சென்னை எழிலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர்களிடம் மழை, வெள்ள பாதிப்பு நிலவரம் குறித்து கேட்டறிந்த முதலமைச்சர், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களிடமும் குறைகளை கேட்டறிந்து ஆறுதல் கூறினார்.