தீபாவளியை முன்னிட்டு பூக்கள் விலை கிடுகிடு உயர்வு...!

Published on
Updated on
1 min read

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில், பூக்களின் விலை 3 மடங்காக அதிகரித்துள்ளது. 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி தோவாளை மலர் சந்தையில், 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பிச்சிப் பூ இன்று ஆயிரத்து, 250 ரூபாய்க்கும், 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகைப் பூ ஆயிரத்து, 500 ரூபாய்க்கும், கனகாம்பரம் ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது. இதே போன்று, கிரேந்தி, செவ்வந்தி, அரளி, சம்பங்கி, ரோஜா உள்ளிட்ட மலர்களின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. பூக்களின் விலை அதிகரித்த போதிலும், வியாபாரிகள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். 

அதேபோன்று, காஞ்சிபுரம் பூக்கடை சத்திரத்தில் பூக்களின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. கிலோ 600 ரூபாய்க்கு விற்பனை ஆன, மல்லிகை மற்றும் கனகாபரம் பூக்கள், இன்று ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது. இதேபோல், சாமந்தி, ரோஜா மலர்கள் கிலோ 300 ரூபாய்க்கு விற்பனை ஆனது. 

இதேபோன்று, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மலர் சந்தையில் பூக்களின் விலை 2 மடங்காக அதிகரித்தள்ளது. 500 ரூபாய்க்கு விற்பனை ஆன ஒரு கிலோ மல்லிகைப் பூ, ஆயிரத்து, 200 ரூபாய்க்கும், 
700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மெட்ராஸ் மல்லி ஆயிரத்து 500 ரூபாயக்கும் விற்பனை ஆகிறது. இதேபோன்று, பிச்சிப் பூ ஆயிரம் ரூபாய்க்கும், முல்லை, ஆயிரத்து, 200 ருபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அரசி, செண்டு பூ, கோழிக் கொண்டை, செவ்வந்தி உள்ளிட்ட பூக்களின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. பூக்களின் விலை உயர்வால் மலர் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com