"இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படவில்லை" - ஜெயக்குமார் குற்றச்சாட்டு!

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக, தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. 

நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வருகின்ற 27-ம் தேதி தமிழ்நாடு முழுவதும், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிவித்தார். இது தொடர்பாக இன்று, சென்னை தலைமைச் செயலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன், தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆலோசனை மேற்கொண்டார். 

இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக, அதிமுக, காங்கிரஸ், தே.மு.தி.க., பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள், வி.சி.க. , ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில், திமுக சார்பில், அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, தாயகம் கவி பங்கேற்றனர். அதிமுக சார்பில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், காங்கிரஸ் கட்சி சார்பில், நவாஸ் மற்றும் சந்திரமோகன் ஆகியோர் பங்கேற்றனர். 

இதையும் படிக்க : சுதந்திரப் போராட்ட தியாகிகள் குறித்து ஆளுநருக்கு உண்மையிலேயே அக்கறை உள்ளதா?-பொன்முடி

தேமுதிக சார்பில் பார்த்த சாரதி, சச்சின் ராஜா, பாஜக சார்பில், கராத்தே தியாகராஜன், சொளந்தரராஜனும், மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில், ஆறுமுகநயினார், சந்தர்ராஜனும் பங்கேற்றனர். 

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்கள் இன்னமும் நீக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினார். அத்துடன், 18 வயது நிரம்பியவர்களை பட்டியலில் சேர்க்கும் தொழில் நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.