"காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சுணக்கம்" ஜி.கே.வாசன்!!

காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டு  விவசாயிகளின் உரிமையை மீட்டுத் தர தமிழக அரசு சுணக்கம் காட்டி வருகிறது என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தெரிவித்துள்ளார்.

காந்தியடிகளின் 155வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள காந்தியடிகளின் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கிராமப்புறங்களில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு கூடுதலாக போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், காவிரி விவகாரத்தில் தமிழக விவசாயிகளின் உரிமையை மீட்டுத் தர தமிழக அரசு சுணக்கம் காட்டி வருவதாகவும் கூறினார்.

மேலும், கூட்டணி கணக்கை பார்க்காமல் காங்கிரஸ் தலைமையோடு பேசி தமிழ்நாட்டிற்கு தண்ணீரை பெற்று தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

அதேபோல், தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்து அறிவிப்போம் என கூறிய அவர், தேர்தல் நெருக்கத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் பொதுக்குழு கூடும் அப்போது கட்சி தொண்டர்களின் விருப்பத்தை அறிந்து அதற்கு ஏற்ப கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் எனவும்,
அதிமுக பாஜக இரண்டு கட்சிகளோடும் நட்பு கூட்டணியில் இருக்கிறோம் அந்த கூட்டணி தொடரும் என்றும் தெரிவித்தார்