தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.. தர்மம் மறுபடியும் வெல்லும் - ஓ.பன்னீர்செல்வம் ட்வீட்

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.. தர்மம் மறுபடியும் வெல்லும் - ஓ.பன்னீர்செல்வம் ட்வீட்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சகட்டத்தை நெருங்கி வருகிறது. நாளைய பொதுக்குழு கூட்டத்தில் தனிதீர்மானம் இயற்றி அதிமுகவை ஒற்றை தலைமையின் கீழ் கொண்டு வர இபிஎஸ் திட்டவட்டமாக இருக்கும் நிலையில் பொதுக்குழு கூட்டத்துக்கு எப்படியாவது தடை வாங்க ஓ.பன்னீர்செல்வம் தனது இறுதி கட்ட முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்" என்பதை தற்போது சுட்டுக்காட்ட விரும்புவதாக பதிவிட்டுள்ளார்.

மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தற்போது நிலவிவரும் சர்வாதிகார மற்றும் அராஜகப் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தென்சென்னை வடக்கு மாவட்ட கழக இணைச் செயலாளர்  தீக்குளிக்க முயன்றதாக வந்துள்ள செய்தி எனக்கு மிகுந்த மன வேதனையை அளிப்பதாகவும் இதுபோன்ற விபரீதமான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என கழகத் தொண்டர்களை அன்புடன் கேட்டுக் கொள்வதாகவும் பதிவிட்டுள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதை தொடர்ந்து, தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். மீண்டும் தர்மமே வெல்லும் என்றும் மீண்டும் தர்மம் வெல்ல கால அவகாசம் இருப்பதாகவும் ஓ.பி.எஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடதக்கது.