விநாயகர் சதுர்த்தி நீர்நிலைகளில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்!

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டது.

மாநிலம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், பலத்த போலீசார் பாதுகாப்புடன் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன. அதன்படி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வைக்கபட்டிருந்த சிலைகள், பழவேற்காடு கடலில் கரைக்கபட்டன. 250-க்கும் மேற்பட்ட சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட நிலையில், ஏரளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

அதேபோல் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரையில் 300-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. திருக்கழுக்குன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சிலைகள், ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. அப்போது ஏராளமான சிறுவர்கள் சிலைகளை கரைத்தும், கடற்கரையில் சாகசங்கள் செய்தும் மகிழ்ந்தனர்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் இந்து முன்னணி சார்பில் 31-ஆம் ஆண்டு விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை தொடர்ந்து கல்லடி கொள்ளை பகுதியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இதில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி திரேஸ்புரம் சங்கு முக கடற்கரையில் இந்து முன்னணி சார்பில் மாநகரில் 51 விநாயகர் சிலைகள் கரைக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. முன்னதாக விநாயகருக்கு பல்வேறு பூஜைகள் நடத்தபட்டு தீபராதனை காண்பிக்கபட்டது. 

இதையும் படிக்க: 800 திரைப்படம் 5 ஆண்டுகள் உழைப்பு - முத்தையா முரளிதரன் பேச்சு