தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாட்டம்...

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கோயில்களில் பக்தர்களின்றி  சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாட்டம்...

வினை தீர்க்கும் தெய்வமாம் விநாயகப் பெருமான் அவதரித்த தினமான இன்று, விநாயகர் சதுர்த்தி திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் விநாயகரை போற்றி நற்காரியங்களை மேற்கொண்டால் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதன்படி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில்  கோயில்களில் பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில்  சென்னை லஸ் கார்னர் பகுதியில் உள்ள விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.  100 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலுக்கு வெளியே நின்று  சாமி தரிசனம் செய்தனர்.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில், வழிபாட்டு தலங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சென்னை வடபழனி கோயிலுக்கு சென்ற பொதுமக்கள், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.புதுச்சேரியில் மிகவும் பிரசித்திபெற்ற மணக்குள விநாயகர் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. விநாயகருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சாமி தரிசனம் செய்தனர்.  

விநாயகர் சதுர்த்தியையொட்டி மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் கோயில் முன்பு ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன. பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டதால், கோயில் முன்பு எளிமையான முறையில் பல திருமணங்கள் நடைபெற்றன. நெருங்கிய உறவினர்களுடன் மட்டும் வந்து, மணமக்கள் மாலையை மாற்றி கொண்டு,  தாலி கட்டி கொண்டனர்.

இதைப்போல கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் பகுதியிலும் கோயில் முன்பு பல திருமணங்கள் நடைபெற்றன. ஆவணி மாத இறுதி முகூர்த்த நாள் என்பதால், 100-க்கும் மேற்பட்ட திருமண ஜோடிகள் கோயில் வளாகத்தில் குவிந்தனர். அப்பகுதியை சுற்றியுள்ள மண்டபங்களிலும் திருமணங்கள் நடைபெற்றதால், சாலையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கொரோனா நோய் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாமல், சமூக இடைவெளியை மறந்து அரங்கேறிய திருமணங்களால், வைரஸ் பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

கோவையில் பிரசித்தி பெற்ற புலியகுளம் முந்தி விநாயகர் கோயிலில், 11 வகையான திரவியங்களை கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது. ஒன்றரை டன் மலர்களால் ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த விநாயகரை, பக்தர்கள் கோயிலுக்கு வெளியே நின்று வழிபட்டனர்.