கோகுல்ராஜ் கொலை வழக்கு...! சுவாதியை ஆஜர்படுத்த உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை..!

கோகுல்ராஜ் கொலை வழக்கு...! சுவாதியை ஆஜர்படுத்த உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை..!
Published on
Updated on
1 min read

கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ்சாட்சியாக மாறிய சுவாதியை நாளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் 10 பேரை குற்றவாளிகள் என அறிவித்ததோடு அனைவருக்கும் ஆயுள் தண்டனை அளித்தும், இறக்கும் வரை சிறையில் இருக்கவும் தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி யுவராஜ், உள்ளிட்ட 10 பேரும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இதே போல் கோகுல்ராஜின் தாயார் சித்ரா மற்றும் சிபிசிஐடி தரப்பில், இந்த வழக்கில் சங்கர் உள்ளிட்ட ஐந்து பேரை விடுதலை செய்ததை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோரின் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், கீழமை நீதிமன்றத்தின் விசாரணை அறிக்கையை பார்க்கும்போது, விசாரணையின் தொடக்க காலத்தில் சுவாதி, நட்சத்திர சாட்சியாக இருந்துள்ளார். ஆனால் அதற்கும் 164 வாக்குமூலத்தை வழங்கியதற்கும் இடையில் ஏதோ நிகழ்ந்துள்ளது. கீழமை நீதிமன்றமும் அதனை பெரிய அளவில் எடுத்துக் கொள்ளாமல் சுவாதியின் சாட்சியை நிராகரித்துள்ளது என தெரிவிக்கப்படுள்ளது.

மேல்முறையீட்டு நீதிமன்றம் துறவிகளைப் போல, தவறுக்கு எதிராக சமநிலையை பேண இயலாது. நீதித்துறையின் மனசாட்சியை திருப்திப்படுத்தும் வகையில் சுவாதியை மீண்டும் சாட்சியாக விசாரிக்க விரும்புகிறது. இது கட்டாயம் தேவையானது எனவும் தவறினால் நீதித்துறையின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிடும் எனவும் தோன்றுவதாக தெரிவித்துள்ளது.

நாமக்கல் காவல் கண்காணிப்பாளர், போதுமான காவல்துறை பாதுகாப்பை சுவாதிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வழங்க வேண்டும் எனவும் சுவாதியை யாரும் சந்திக்கவோ, போனில் பேசுவதோ கூடாது எனவும் கூறியுள்ளனர். ஸ்வாதியின் பெற்றோருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் போதுமான பாதுகாப்பு வழங்க வேண்டும்; சாட்சி சுவாதி பயமின்றி இந்த நீதிமன்றத்திற்கு வருவது உறுதி செய்ய வேண்டும்; விசாரணை அதிகாரி சாட்சி சுவாதியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை நாளை (25.11.2022) ஒத்திவைத்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com