மேம்படுத்தப்பட்டு வரும் அரசு மருத்துவமனைகள்...... மக்கள் நாடும் இடமாக மாறி வருகிறதா?!!

மேம்படுத்தப்பட்டு வரும் அரசு மருத்துவமனைகள்...... மக்கள் நாடும் இடமாக மாறி வருகிறதா?!!

சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கையடக்க கணினிகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  வழங்கியுள்ளார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு:

சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் 2022-2023 ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவ பட்டப்படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் 582 பேருக்கு கையடக்க கணினி வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பணி நியமன ஆணை, மருத்துவ உபகரணம் வழங்கும் விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கையடக்கக் கணினிகளை வழங்கினார்.

மேம்படுத்தப்பட்ட வசதிகள்:

தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில்  பல்வேறு கட்டமைப்பு பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார் என்றும் அடுத்த வாரம் தமிழக முதலமைச்சர் 17 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆயிரத்து 18 கோடியே 80 லட்சம் மதிப்பில் பணிகளை துவக்கி வைக்கிறார் எனவும் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  ரூபாய் 15 கோடி செலவில் 12 ஒருங்கிணைந்த ஆய்வகங்கள் 12  இடங்களில் 145 கோடி செலவில் கட்டப்பட உள்ளது எனவும் 10 இடங்களில் 50 படுக்கைகளுடன் கூடிய புதிய கட்டமைப்பு 237 கோடியே 50 லட்சம் செலவில் தொடங்கப்பட உள்ளது எனவும் கூறியுள்ளார்.

புற்றுநோய் மருத்துவமனை:

மேலும் 80 கோடி மதிப்பில் 100 படுக்கைகளுடன் கூடிய 2 மருத்துவ கட்டமைப்பு கட்டிடங்கள், அதேபோன்று காஞ்சிபுரம் மாவட்டம் காரப்பேட்டை புற்றுநோய் மருத்துவமனை ஏற்கனவே  125 கோடி மதிப்பில் கட்டமைக்கப்பட்டு வருகிறது மேலும் 100 கோடி ரூபாய்கு புதிய கட்டிடம் கட்டும் பணியையும் முதலமைச்சர் துவக்கி வைக்கவுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

உபகரணங்கள்:

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 65 கோடி செலவில் நரம்பியல் துறைக்கென்று புதிய கட்டிடத்தையும், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரியார் மருத்துவமனையில் 72 கோடி மதிப்பில் புதிய மருத்துவ கட்டிடங்களும் உபகரணங்களும் வழங்கப்பட உள்ளது என்று கூறிய அமைச்சர் மாசு மருத்துவத்துறையின் வரலாற்றில் ஒரே நாளில் 1941 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய மருத்துவ கட்டமைப்பு துவக்க பணிகள் அடுத்த வாரம் நடைபெற இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

மக்கள் நாடும் இடமாக:

தற்பொழுது மக்கள் அதிக அளவில் அரசு மருத்துவமனை சேவைகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர் எனவும் ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டு இரண்டு மாதங்களாக காத்திருக்கிறோம் எனவும் கூறிய மாசு ஆளுநரை சந்திப்பது விதி அல்ல மரபு தான் என்றாலும் அவருடன் இணக்கமாக செல்ல வேண்டும் என்பதால் அவரை சந்திக்க காத்திருக்கிறோம் எனவும் கூறியுள்ளார்.

இதையும் படிக்க:   சாலை மறியலில் ஈடுப்பட்ட நொச்சிக்குப்பம் மக்கள்.... வாழ்வாதாரம் கேள்விகுறியாகிறதா?!!