இலங்கைக்கு விரைவில் 2வது கட்ட நிவாரணம் அனுப்ப தமிழக அரசு திட்டம் - அமைச்சர் செஞ்சி மஸ்தான்

இலங்கைக்கு 2ம் கட்டமாக அடுத்த வாரம் நிவாரண பொருட்களை அனுப்பி வைக்க உள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விரைவில் 2வது கட்ட நிவாரணம் அனுப்ப தமிழக அரசு திட்டம் - அமைச்சர் செஞ்சி மஸ்தான்

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலை நிலவுவதால்; அத்தியாவசிய பொருட்கள், பெட்ரோல்-டீசல் விலை ஏற்றம் கண்டுள்ளன.

இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக ஆத்திரத்தில் உள்ள மக்கள் சாலையில் இறங்கி போராடி வருகின்றனர். மேலும் நிலைமையை சரிசெய்ய இந்தியா, சீனா உள்ளிட்ட நட்பு நாடுகளிடம் இலங்கை அரசு நிவாரண உதவிகளை கோரி வருகிறது.

இந்தநிலையில் அம்மக்களின் துயர் துடைத்திடும் வகையில் மத்திய அரசு அனுமதியுடன் 123 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என தமிழக அரசு கூறியது.

குறிப்பாக 80 கோடி ரூபாய் மதிப்பிலான 40 டன் அரிசி, 28 கோடி ரூபாய் மதிப்புள்ள 137 வகை மருந்துகள், 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 500 டன் பால் பவுடர் ஆகியன வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில் முதற்கட்டமாக கடந்த மாதம் 18ம் தேதி மருந்து உள்ளிட்ட சில பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்தநிலையில் இரண்டாவது கட்டமாக அடுத்தவாரம் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு நிவாரண பொருட்களை அனுப்பி வைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் அரிசி, பால் பவுடர், அத்தியாவசிய மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.