ஆளுநர் ரவி அதிகார வரம்பை மீறுகிறார்.. வேந்தர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் - வைகோ ஆவேசம்!!

பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் ரவியை நீக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

ஆளுநர் ரவி அதிகார வரம்பை மீறுகிறார்.. வேந்தர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் - வைகோ ஆவேசம்!!

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் மண்டல பல்கலைக்கழகங்களின் நூற்றுக்கும் மேற்பட்ட துணைவேந்தர்கள் பங்கேற்ற, கோவை மாநாட்டில் உரை ஆற்றிய ஆளுநர் ரவி, தமது அதிகார வரம்பை மீறி, அரசியல் கருத்துகளைப் பேசி இருப்பது கண்டனத்திற்கு உரியது என தெரிவித்துள்ளார். 

மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசுகளின் செயல்பாடுகளுக்கு, முட்டுக்கட்டை போடுகின்ற வேலையைத்தான் ஆளுநர்கள் தொடர்ந்து செய்து வருவதாகவும், தமிழ்நாட்டின் முந்தைய ஆளுநர் தற்போதைய பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மேற்கு வங்கத்தின் தற்போதைய ஆளுநர் ஜெக்தீப் தங்கர் ஆகியோர், அரசமைப்புச் சட்டத்தைத் தொடர்ந்து மீறி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ள வைகோ, 7 பேர் விடுதலை குறித்த பிரச்சினையில், தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை, தமிழக ஆளுநர் ரவி திருப்பி அனுப்பி, ஏழரைக் கோடித் தமிழர்களை அவமதித்து இருக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, அவர், ஆளுநர் பொறுப்பில் நீடிக்க அடிப்படை ஏதும் இல்லை என்றும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநரை நீக்க, மராட்டிய அரசு தீர்மானித்து இருப்பதை போன்று, தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து, ஆளுநர் ரவியை நீக்க வேண்டும் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.