" பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கை பரப்புச் செயலாளர் போன்று செயல்படுகிறார் ஆளுநர் " - செல்வப்பெருந்தகை .

" பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கை பரப்புச் செயலாளர் போன்று செயல்படுகிறார் ஆளுநர்   "  - செல்வப்பெருந்தகை .

தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்கு வித்திடும் நோக்கில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார்.  9 நாட்கள் பயணத்தை நிறைவு செய்து தமிழ்நாடு திரும்பிய முதலமைச்சர் முதலீடு குறித்து பல தலைவர்களையும் அதிகாரிகளையும்  சந்தித்து பேசியதாகவும் இந்த முதலீடுகள் மூலம் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் உறுதியளித்திருந்தார். 

இவ்வாறிருக்க, முதலமைச்சரின் இந்த பயணம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம் செய்துள்ளார். 

உதகையில் நடைபெற்ற பல்கலைக் கழக துணை வேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு பேசுகையில், முதலமைச்சரின் முதலீடுகள் குறித்த அரசு முறைப்பயணத்தை சுட்டி காட்டி,  வெளிநாடு சென்றால் மட்டும் முதலீட்டாளர்கள் வந்துவிட மாட்டார்கள் என்றும், உலகளாவிய பெரும் தொழில் அமைப்புகளுக்கான சிறந்த சுற்றுச்சூழல் அமைப்பை நாம் உருவாக்க வேண்டும் என்றும், தமிழகத்திலேயே எண்ணற்ற பட்டதாரி இளைஞர்களுக்கு வேலையில்லாத நிலை இருப்பதாகவும், அடிப்படை  கல்விக்கு மட்டுமின்றி உயர்கல்விக்கும்  தமிழ்நாட்டில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் கூறினார். 

ஆளுநரின் இந்த சர்ச்சையான விமர்சனத்தை கண்டித்து  தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவரும் ஸ்ரீ பெரும்புதூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான  செல்வப்பெருந்தகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 அதில், தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று (05.06.2023) உதகையில் நடைபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் பேசும் போது, அந்நிய முதலீடுகளை பெறுவதற்காக வெளிநாடு சென்ற மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களின் வெளிநாட்டுப் பயணத்தை தேவையில்லாமல் விமர்சனம் செய்துள்ளார்;  இவரின் பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும், 

சமீபத்தில் குழந்தைத் திருமணம் பற்றி பேசிய ஆளுநர் ரவி அவர்கள், தமிழ்நாடு சமூக நலத்துறை அதிகாரிகள் பழிவாங்கும் நோக்கத்தோடு குழந்தைத் திருமணம் குறித்து சிதம்பரம் தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுத்தார்கள் என்றும், உண்மையில் சிதம்பரத்தில் குழந்தைத் திருமணங்கள் நடக்கவில்லை என்றும் தீட்சிதர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். ஆனால், தற்போது சிதம்பரம் தீட்சிதர்கள் குடும்பத்தில் குழந்தைத் திருமணம் நடைபெற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனதால், மூக்குடைபட்ட நிலையில் உள்ள ஆளுநர், அதை மடைமாற்றம் செய்வதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெளிநாடு பயணம் பற்றி விமர்சித்துள்ளார். 

ஆளுநராகப் பதவியேற்றதிலிருந்து தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களின் நலனிற்கும் எதிராகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழும் ஆளுநர் இவ்வாறு தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் கட்சித்தலைவர் போல செயல்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்த நிலை பாஜகவிற்கு எதிர்நிலை கொண்ட கட்சிகள் ஆட்சி செய்யும் அனைத்து மாநிலங்களிலும் தொடர்கிறது" , என்றும் சாடினார்.  

இதையும் படிக்க     |  "ஆவின் நிறுவனம் அழிவுப் பாதைக்கு சென்று விடும் " - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.

அதோடு, " ஆளுநரின் செயல்பாடுகள், பேச்சுகள் நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் அரசியலில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாகவே இருக்கின்றன. பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கை பரப்புச் செயலாளர் போன்று செயல்படுவதையும், தேவையற்றவற்றைப்   பேசுவதையும் ஆளுநர் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். ஆளுநர் பதவிக்கு தகுந்த மாதிரி அவரின் செயல்பாடுகள் இருக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்." என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

இதையும் படிக்க     | தமிழ்நாடு காங்கிரஸில் ஓங்குகிறதா சசிகாந்தின் கை!