”ஆளுநரின் செயல் அரசியல் சாசனத்திற்கு எதிரானது” - உச்ச நீதிமன்றம் காட்டம்!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் காட்டமாக கூறியுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இருபதுக்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. முன்னதாக இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மசோதாக்களை நிறுத்தி வைக்கும் அதிகாரம் ஆளுநர்களுக்கு இல்லை எனவும், மசோதாக்கள் மீது ஆளுநர் என்ன முடிவு எடுப்பார் என உச்சநீதிமன்றம் காத்திருக்கிறது எனவும் கூறி விசாரணையை ஒத்தி வைத்தது.

இதையும் படிக்க : அயோத்திதாசப் பண்டிதரின் மணிமண்டபம் திறப்பு...!

அதன்படி, இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது தமிழ்நாடு சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் குடியரசு தலைவருக்கு அனுப்பியது ஏன்? என்று கேள்வி எழுப்பியதோடு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று கண்டனம் தெரிவித்தது. பின்னர் வழக்கு விசாரணையை டிசம்பர் 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.