" ஆளுநர் பதவியே இருக்க கூடாது" - வைகோ காட்டம்!

" ஆளுநர் பதவியே இருக்க கூடாது" -  வைகோ காட்டம்!

ஆளுநர் என்ற பதவியே இருக்க கூடாது எனவும் தமிழக ஆளுநர் நீக்கபட்டால் தான் தமிழ்நாட்டில் ஜனநாயகம்  இருக்கும் எனவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என்.இரவியை பதவி நீக்கம் செய்யக்கோரி இந்திய குடியரசு தலைவரிடம் வலியுறுத்தி நடத்தும் "கையெழுத்து இயக்கம்" தொடக்க விழா" நடைபெற்றது. இந்த கையெழுத்து இயக்கத்தை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடங்கி வைத்தார். இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு முதல் கையெழுத்திட்டார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரண்டாவதாக கையெழுத்திட்டார். மூன்றாவதாக கழக முதன்மை செயலாளர் துரை வைகோ கையெழுத்திட்டார். 

முதலில் பேசிய துரை வைகோ, பல்வேறு சிரமங்களுக்கு இடையில் தேர்வு எழுதிய கல்லூரி மாணவர்களுக்கு பட்டமளிப்பு சான்றிதழ் வழங்காமலும், ஒட்டு மொத்தமாக தமிழக மக்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஆளுநர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று இந்த கையெழுத்து இயக்கம் தொடங்கப்படுகிறது. மேலும், இது அனைத்து மாவட்டங்களிலும் தொடங்க உள்ளது என தெரிவித்தார். 

தொடர்ந்து  இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு பேசுகையில், தமிழ்நாட்டின் ஆளுநர் பொறுப்பில் இருந்து ஆர்.என் ரவியை நீக்க மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்துகின்றனர். இந்த கோரிக்கை தீர்மானமான கோரிக்கையாக உள்ளது. இது அவசியமானதும் கூட. தற்போதைய ஆளுநர் ஜாதி, மதம் என்று இல்லாமல், மதசார்பற்ற முறையில் இருக்க வேண்டும் என்பதை மாற்றும் வகையில் செயல்பட்டு வருகிறார்.

அரசியல் சாசனத்திற்கு எதிராக நடந்து வருகிறார். சமத்துவம், சகோதரத்துவம் என்ற முறையில் அம்பேத்கார் அரசியல் சட்டத்தை கொண்டு வந்துள்ளார். அதற்கு மாறாக, மக்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற கருத்துக்கு மாறாக, இந்திய நாடு மதசார்பற்ற நாடு என்பதற்கு மாறாக ஆளுநர் தன்னிச்சையாக தனி பொறுப்பு, தனி ஆதிக்கம், செல்வாக்கை கொண்டு நெருக்கடி கொடுக்கும் அவரை பதவியில் இருந்து நீக்க இந்த கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது.

இந்த முயற்சியை ஆதரிக்கும் வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முதல் கையெழுத்து போட்டு உள்ளதற்கு பெருமைப்படுகிறேன். இது நிச்சயம் பல கோடி மக்களை சென்று சேர வேண்டும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய வைகோ, தமிழ்நாட்டின் வரலாற்றில் சுதந்திர இந்தியா என்று நாடு விடுதலை பெற்ற பின் தமிழ்நாட்டு ஆளுநர்கள் யாரும் செய்யாத அட்டூழியம் செய்து வரும் ஆளுநர் ஆர் என் ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று இந்திய குடியரசு தலைவரை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்துகிறோம். ஜூன் 14 ஆம் தேதி நடத்திய பொதுக்குழுவில் இதற்கான தீர்மானம் கொண்டு வந்து இன்று கையெழுத்து இயக்கம் நடத்த தொடங்கி உள்ளோம். ஆளுநர் உரையின் போது பெரியார், அம்பேத்கர், அண்ணா பெயர்களை வாசிக்காமல் விட்டது மாபெரும் தவறு. அவர்கள் பெயர் உச்சரிக்க கூடாத பெயரா? என கேள்வி எழுப்பியுள்ளார். மார்க்சியம் காலாவதியானது என்று ஆளுநர் கூறியதாக சுட்டிக்காட்டிய அவர் மார்க்சியம்  பற்றி ஆளுநருக்க என்ன தெரியும் என கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும், ஆளுநர் பதவியை விட்டு விட்டு என்ன வேண்டுமானாலும் பேசுங்கள் எனக் கூறிய அவர், இந்தியை திணிக்க சொல்ல இவருக்கு என்ன உரிமை, தகுதி உள்ளது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து, திராவிட முன்னேற்றத்தின் தலைமையின் கீழ் உள்ள அனைத்து கட்சிகளும் இந்த கையெழுத்து இயக்கத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் ஆகவே மத்திய அரசு ஆளுநரை திரும்ப பெற்று பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று தெரிவித்தார். 

இந்நிகழ்வில் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டனர்.