"அரசே தனியார் பால் விற்பனையை ஊக்கப்படுத்துகிறது" டிடிவி தினகரன்!

"அரசே தனியார் பால் விற்பனையை ஊக்கப்படுத்துகிறது" டிடிவி தினகரன்!

அரசே தனியார் பால் விற்பனையை ஊக்கப்படுத்துகிறது என டிடிவி தினகரன் தமிழக அரசின் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

ஆவின் பால் விநியோகத்தில் தொடர்ந்து குளறுபடி நிலவுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்,  தாய்ப்பாலுக்கு இணையாக குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஆவின் பால் உரிய நேரத்தில் கிடைக்காததால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுமக்கள் மூன்றாவது நாளாக தவித்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார். 

மேலும், வெளிமாவட்டங்களில் இருந்து சென்னையில் உள்ள ஆவின் பால்பண்ணைகளுக்கு வரவேண்டிய பால் வரத்தில் குறைவு ஏற்பட்டதன் காரணமாகவே தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், மக்களின் அத்தியாவசிய சேவைகளில் ஒன்றான ஆவின் பால் விநியோகத்தில் தொடர்ந்து பல மாதங்களாக குளறுபடி நிலவுவது மறைமுகமாக தனியார் பால் விற்பனையை அரசே ஊக்கப்படுத்துவதாக மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளதாக கூறியுள்ளார்.

ஆகவே, பால் கொள்முதலை அதிகரித்து, பால் விநியோகத்தை சீரமைக்க,  இந்த விவகாரத்தில் முதலமைச்சர் உரிய கவனம் செலுத்தி உடனடித் தீர்வு காணவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிக்க:"மே மாதத்தில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை உயர்வு" சென்னை மெட்ரோ இரயில்!