குளிர்பானம் என நினைத்து மது குடித்து பலியான பேரன்: அதிர்ச்சியில் மயங்கி விழுந்து உயிரிழந்த தாத்தா...

குளிர்பானம் என நினைத்து மது குடித்து பலியான பேரன்: அதிர்ச்சியில் மயங்கி விழுந்து உயிரிழந்த தாத்தா...

குளிர்பானம் என நினைத்து மது குடித்த 4 வயது சிறுவன் இறந்த நிலையில் இதனை கண்ட அதிர்ச்சியடைந்த சிறுவனின்  தாத்தா உயிரிழந்த சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on

வேலூர் மாவட்டத்தில் தினமும் சிறுவர்கள் முன்னிலையில் மது அருந்திவந்த பெரியவரின் செயல் பெரும் துயரத்தில் முடிந்ததுள்ளது. மது இரண்டு உயிரை எடுத்துள்ளது. என்ன நடந்தது என்பதை இப்போது பார்ப்போம். வேலூர் மாவட்டம், திருவலம் அடுத்த சுகர்மில் அண்ணா நகர் கன்னிகோயில் தெருவை சேர்ந்தவர் சின்னசாமி (62) . இவர் கூலி தொழிலாளி. இவரது மகன் சுந்தரம், மகள் விஜயா இருவருக்கும் திருமணமாகிவிட்டது.

மகள் விஜயாவுக்கு ருத்ரேஷ் (4) உட்பட 2 மகன்கள் உள்ளனர். சின்னசாமி தினமும் மது வாங்கி வந்து வீட்டில் வைத்து குடித்து வந்திருக்கிறார். நேற்றுமுன்தினம் மாலை சின்னசாமி வீட்டில் மது குடித்துள்ளார். மீதியுள்ள மது மற்றும் தின்பண்டங்களை அங்கேயே வைத்துவிட்டு தூங்கி இருக்கிறார்.

அப்போது விளையாடிக் கொண்டிருந்த பேரன் ருத்ரேஷ், அங்கிருந்த தின்பண்டத்தை சாப்பிட்டுள்ளான். அங்கிருந்த மதுவையும் குளிர்பானம் என நினைத்து குடித்ததாக கூறப்படுகிறது. இதில் வாந்தி எடுத்து குழந்தை ருத்ரேஷ் மயங்கி விழுந்தான். சத்தம் கேட்டு எழுந்த சின்னசாமி, பேரன் மது குடித்து மயங்கியதை அறிந்து அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார்.

உடனே தாத்தா, பேரன் இருவரையும் குடும்பத்தினர் மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்கள் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சின்னசாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் ருத்ரேஷை மேல்சிகிச்சைக்காக மற்றொரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ருத்ரேஷ் நேற்று காலை பரிதாபமாக இறந்தான். சிறுவர்கள் முன்னிலையில் மது அருந்தியதால் தாத்தாவும் பேரனும் பலியாகி உள்ளனர். இது தொடர்பாக திருவலம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com