பூர்வீக வீட்டையே நூலகமாக மாற்றிய ஐ.பி.எஸ். மூர்த்தியின் அடுத்த முயற்சி...!

திண்டுக்கல் மாவட்டத்தில் சொந்த வீட்டையே நூலமாக மாற்றிய தாம்பரம் காவல் இணை ஆணையர் மூர்த்தி, ஒரு நாள் பயிற்சி பட்டறை கருத்தரங்கை நடத்தியுள்ளார்.  

திண்டுக்கல் அருகே வக்கம்பட்டி கிராமத்தில் பாலா படிப்பகம் என்ற பெயரில் நூலகம் ஒன்றை நடத்தி வருகிறார் ஐ.பி.எஸ். அதிகாரியான மூர்த்தி. தந்தை பாலுசாமியின் நினைவாக செயல்பட்டு வரும் இந்த நூலகம் கல்வியை கசடற கற்றுக் கொள்வதற்கு ஏதுவாய் அமைந்துள்ளது. 

சென்னை தாம்பரம் காவல் சரக இணை ஆணையராக பணியாற்றும் இவர் அமைத்த நூலகத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான புத்தகங்கள், போட்டி தேர்வு எழுதுவோருக்கான புத்தகங்கள், கேரம் போர்டு, செஸ் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் இடம் பெற்றுள்ளது. நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் பயன்பெற்று வரும் நிலையில், பாலா படிப்பகத்தின் அடுத்த கட்ட முயற்சியாக கருத்தரங்கம் ஒன்று நடந்தேறியது. 

திண்டுக்கல் வக்கம்பட்டி ஹோலி கிராஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் உதயம் லயன் சங்கத்துடன் இணைந்து நடத்திய கருத்தரங்கில் சிகரங்களை நோக்கி என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது. 

நிகழ்ச்சியை மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் தொடங்கி வைக்க, பாலா படிப்பகத்தை தொடங்கியவரும், தாம்பரம் காவல் இணை ஆணையரானருமான மூர்த்தி மாணவர்களிடையே கல்வியின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார். 

இதையும் படிக்க : மகாதீபக் கொப்பரையில் இவ்வளவு சிறப்புகளா? எத்தனை நாள் எரியும் திருவண்ணாமலை தீபம்?

கல்வியே செல்வம் என்ற தலைப்பில் சிறுபான்மை நலத்துறை கருத்தாளர் ஆர்பர்ட் பெர்னாட்ஷா மற்றும் ஓடி விளையாடு ஊன்றி படி என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான கதை சொல்லும் எழுத்தாளர் ரேவதி முகில் ஆகியோர் கலந்துரையாடினர். 

மேலும் எனக்கு பிடித்தது என்ற தலைப்பில் கோவை அரசு கலைக்கல்லூரி இணை பேராசிரியர் மாலதி, பெற்றோர் ஆசிரியர் என்ற தலைப்பில் சுகாதார துணை இயக்குநர் உதவியாளர் பா.தங்கம், இலக்கை நோக்கி என்ற தலைப்பில் கவிஞர் தங்கமூர்த்தி, ஜென் ஐ.ஏ.எஸ். அகாடமி நிறுவனர் பிரகாஷ் ஆகியோர் பேசினர். உயர்கல்வியும் வேலை வாய்ப்பும் என்ற தலைப்பில் முனைவர் பி.கனகராஜ், சாந்தி, மற்றும், சமூக உறவுகள் குறித்து சோசியல் சர்வீஸ் நிறுவனர் ஆர்.ராமசாமி ஆகியோர் மாணவ மாணவிகளிடையே பேசினர். 

நிகழ்ச்சியில் லயன் செயலாளர் லயன் ராதா கிருஷ்ணன் மற்றும் பொருளாளர் லலிதா, இசக்கி முத்து ஆகியோர் பங்கேற்றனர். சொந்த கிராமத்து மக்கள் படிப்பறிவு பெற்று முன்னேற்றமடைய வேண்டும் என்கிற உயரிய கொள்கையோடு சேவையாற்றிய மூர்த்திக்கு மாணவ மாணவியர் மற்றும் நிகழ்ச்சி பங்கேற்பாளர்கள் கரம் கூப்பி நன்றி தெரிவித்தனர்.