சென்னையில் கொட்டி தீர்த்த மழை... வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி...

சென்னை, செங்கல்பட்டு, சுற்றியுள்ள மாவட்டங்களில் இரவு பெய்த தொடர் மழையால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியுடன் காணப்பட்டது.

சென்னையில் கொட்டி தீர்த்த மழை... வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி...

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாகவும் வெப்பச் சலனத்தின் காரணமாகவும் நீலகிரி கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களிலும் உள் மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்கள் ஆகிய இடங்களில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மேலும் சென்னையிலும் வெப்பச்சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன், நகரைச் சுற்றியுள்ள சில பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.  

இந்நிலையில் நேற்று மாலை முதல் விருகம்பாக்கம், வடபழனி, கோயம்பேடு, கிண்டி, நுங்கம்பாக்கம், மேற்கு மாம்பலம் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதேபோல், அம்பத்தூர், கொரட்டூர், அண்ணா நகர்,  ஐயப்பன்தாங்கல் ஆகிய இடங்களில் மிதமான மழை இரவு முழுவதும் பெய்தது. மேலும், பூந்தமல்லி, வியாசர்பாடி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. 

இதேபோல், சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் நகர் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்றுடன் கூடிய சூழ்நிலையை நிலவி வருகிறது.

சென்னை மட்டுமல்லாது காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய மழை இரவு முழுவதும் பெய்தது.