கன்னியாகுமரியில் 3-வது நாளாக விடிய விடிய கனமழை... திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு...

கன்னியாகுமரியில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையால் குடியிருப்புப் பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. 

கன்னியாகுமரியில் 3-வது நாளாக விடிய விடிய கனமழை... திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு...

வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முழுவதும் முடங்கியுள்ளது. மேலும் மழை நீர் வீடுகளை சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். 

நாகர்கோவில் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பெரும்பாலான கிராமங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் அருகே ரயில்வே ஊழியர்களின் குடியிருப்பு அமைந்துள்ள இடத்தில் இடுப்பளவுக்கு தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது. இதனால் குடியிருப்பில் வசித்து வருவோர் மற்றும் இரயில்வே ஊழியர்களும் குடும்பத்தாரும் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். பெரும்பாலான ஊழியர்கள் இடுப்பளவு வெள்ளத்தில் தங்கள் வாகனங்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று வருகின்றனர்.

விடிய விடிய பெய்து வரும் மழையால் வாகனங்களில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனிடையே வள்ளக்கடவு, திக்குறிச்சி, சிதறால், முஞ்சிறை உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களில் மழை நீர் புகுந்ததால் பயிர்கள் சேதமடைந்துள்ளன.  

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பேச்சிப்பாறை அணை 43 அடியை எட்டியுள்ளது. இதனால் அணையில் இருந்து ஆயிரத்து 938 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதே போல் தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படடுள்ளது. கனமழை எதிரொலியாக திற்பரப்பு அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் தடுப்பு வேலிகளையும் தாண்டி ஆர்பரித்து கொட்டி வருகிறது. 

இதனிடையே கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புரவசேரி, தேரேகால்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் மனோ தங்கராஜ், ஆட்சியர் அரவிந்த் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். இதைதொடர்ந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தருவதாக கூறி அமைச்சர் மனோ தங்கராஜ், மழை பாதிப்புகளை சரி செய்ய பேரிடர் மீட்பு படையினர் வர உள்ளதாக கூறினார்.