உதகை சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு...!

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சேரிங்கிராஸ், படகு இல்லம், மத்திய பேருந்து நிலையம், பிங்கர்போஸ்ட், காந்தள், தலைக்குந்தா உள்ளிட்ட பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழையால் நிலவி வரும் கடுங்குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் மழையால் மலைத் தோட்ட காய்கறிகளை பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

தேனி மாவட்டம் வைகை நீர்ப்பிடிப்பு பகுதியில் காற்றுடன் பெய்த கனமழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வைகை ஆறு உற்பத்தியாகும் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு, கண்டமனூர் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென பலத்த காற்றுடன்  ஒருமணிநேரத்திற்கும் மேலாக மழை பெய்ததால் சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் உருவானதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் மானாவாரி பயிர்களுக்கு இந்த மழை உகந்தது என்பதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.  

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மற்றும் அதன் சுற்றவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. அறந்தாங்கி, நாகுடி, பெருங்காடு, மேலப்பட்டு, ஆவுடையார்கோவில் போன்ற  பகுதிகளில் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் திடீரென இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை  பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த  சூழ்நிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதன் காரணமாக அரசு மருத்துவமனை வளாகம் முழுவதும் வெள்ளநீர்  சூழ்ந்து குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் நோயாளிகள் உள்ளே செல்லவும், வெளியே வர முடியாமலும் தவித்து வருகின்றனர்.