தேசிய நெடுஞ்சாலைகளை சூழ்ந்த பனிப்பொழிவு...!கடும் சிரமத்துக்குள்ளாகும் பொதுமக்கள்!!

தேசிய நெடுஞ்சாலைகளை சூழ்ந்த பனிப்பொழிவு...!கடும் சிரமத்துக்குள்ளாகும் பொதுமக்கள்!!

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கடும் பனிப்பொழிவால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு:

மார்கழி மாதம் என்றாலே பனிப்பொழிவு என்பது வழக்கமான ஒன்று தான். ஆனால் இந்த வருடம் பனிப்பொழிவு என்பது வழக்கத்திற்கு மாறாக அதிகமாகவே காணப்படுகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கடும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்,  திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி மற்றும் கே.ஜி.கண்டிகை , மத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை கடும்பனிப் பொழிவு காணப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி வாகனங்களை இயக்கி சென்றனர். மேலும், இப்பனி பொழிவின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

அதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் பனிப்பொழிவு காரணமாக வெள்ளை போர்வை போர்த்தியது போல் காணப்பட்டது. இதனால், சூளகிரி தேசிய நெடுஞ்சாலை செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்ட படி சென்றது.

இதையும் படிக்க: மெரினாவில் 6 டன் மணலால் உருவான மணற் சிற்பம்...திறந்து வைத்த முதலமைச்சர்!

திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதலே கடும் பனிப்பொழிவு இருந்து வருவதால், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

அதேபோல், திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம், வலங்கைமான் , குடவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கடுமையான பனிப்பொழிவு நிலவியதால், நடைப்பயிற்சி செய்பவர்கள் காலையில் அன்றாட பணிகளுக்கு செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.