உச்சத்தை தொட்ட தக்காளி விலை : அடுத்தக்கட்டமாக தோட்டக்கலைத்துறை மூலம் குறைந்த விலையில் விற்பனை!

உச்சத்தை தொட்ட தக்காளி விலை : அடுத்தக்கட்டமாக தோட்டக்கலைத்துறை மூலம் குறைந்த விலையில்  விற்பனை!

இன்று முதல் தினம் தோறும் டான்ஹூடா விற்பனை மையங்களில் தக்காளி விற்பனை செய்யப்படும் என தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து குறைவு காரணமாக நாளுக்கு நாள் தக்காளி விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதன்படி, இன்று ஒரு கிலோ தக்காளி அதிகபட்சமாக 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தக்காளி வாங்க முடியாமல் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

இதனிடையே, குறைந்த விலைக்கு மக்களுக்கு தக்காளியை விற்பனை செய்ய வேண்டும் என அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முதற்கட்டமாக, பண்ணை பசுமை அங்காடிகளில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு, நியாய விலை கடைகளிலும் விற்பனை செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து, நேற்று முதல் தோட்டக்கலைத் துறையிலும் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனையை அரசு தொடங்கி இருக்கிறது.

இதையும் படிக்க : தமிழக அரசு மதுவிலக்கு குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தத் தயாரா? ராமதாஸ் கேள்வி!

அதன்படி, சென்னையில் நேற்று முதல் தோட்டக்கலைத்துறை சார்பில் இரண்டு நடமாடும் வாகனங்கள் மூலம் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இன்று முதல் சென்னையில் உள்ள நான்கு டான்ஹூடா விற்பனை மையங்களில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனையை  தோட்டக்கலைத்துறை தொடங்கியுள்ளது.

அந்த வகையில், கதீட்ரல் சாலையில் உள்ள தோட்டக்கலை துறையின் டான்ஹூடா விற்பனை மையத்தில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் செம்மொழிப் பூங்கா, அண்ணா நகர், திருவான்மியூர், பெரம்பூரில் உள்ள நான்கு விற்பனை மையங்களில் தோட்டக்கலைத் துறை சார்பில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்படும் நிலையில், ஒரு கிலோ தக்காளி தரத்திற்கு ஏற்ப அதிகபட்சமாக 75 ரூபாய்க்கும், குறைந்தபட்சம் 70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.