மனைவியை  அரிவாளால் வெட்டிவிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்த கணவர்...

மணப்பாறை அருகே மனைவியை அரிவாளால் வெட்டி விட்டு தற்கொலை செய்து கொண்ட கணவர். கவலைக்கிடமான நிலையில் மனைவி மருத்துவமனையில் அனுமதி.

மனைவியை  அரிவாளால் வெட்டிவிட்டு  தூக்கு போட்டு தற்கொலை செய்த கணவர்...
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கருமலை அருகே உள்ள மாங்கனாபட்டி அரசுமலைக்களத்தை சேர்ந்தவர் ஆண்டியப்பன் (40) விவசாய கூலித் தொழிலாளி. இவரது மனைவி அழகம்மாள் (30). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்டியப்பனின் சகோதரி இறந்து விட்டதால் அவர் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் கணவன் – மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை ஏற்படவே ஏற்கனவே மிகுந்த மனவிரக்தியில் இருந்த ஆண்டியப்பன் மேலும் கோபமடைந்தார். 
 
இந்நிலையில் இருவரும் வாக்குவாதம் செய்து கொண்ட பின்னர் வழக்கம் போல் தூங்கச் சென்று விட்டனர். இதையடுத்து இன்று அதிகாலை எழுந்த ஆண்டியப்பன் அரிவாளை எடுத்து மனைவி அழகம்மாளின் முகத்தில் வெட்டினார். இதில் அவர் வலியால் சப்தம் போடவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்து அழகம்மாளை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததைத் தொடர்ந்து அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். 
 
இந்நிலையில் மனைவியை வெட்டிய ஆண்டியப்பன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பார்த்த போது அவர் இறந்திருப்பது தெரியவந்தது. உடனே இதுபற்றி புத்தாநத்தம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.