அந்தமானில் இருந்து கப்பலில் 50 பேரை இறக்கி இருப்பேன் - சிங்கம் சூர்யா ஸ்டைலில் கர்ஜித்த ராமதாஸ்...!

கடலூரில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஆட்கள் இல்லை என்று சொல்லி இருந்தால் அந்தமானில் இருந்து கப்பலில் 50 பேரை அழைத்து வந்து இருப்பேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அந்தமானில் இருந்து கப்பலில் 50 பேரை இறக்கி இருப்பேன் - சிங்கம் சூர்யா ஸ்டைலில் கர்ஜித்த ராமதாஸ்...!

கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கடலூரில் உள்ள தனியார் திருமண நிலையத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அதன்பின்னர் நிர்வாகிகளிடையே பேசிய நிறுவனர் ராமதாஸ்  கூறுகையில்,

கடலூரில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் போட்டியிடாமல் இருந்தது மிகவும் வேதனை அளித்ததாகவும், போட்டியிட ஆட்கள் இல்லை என்று சொல்லி இருந்தால் அந்தமானில் இருந்து கப்பலில் 50 பேரை அழைத்து வந்து இருப்பேன் என கூறினார்.

கடலூரில் முந்திரி தொழிலாளி கோவிந்தராஜ் கொலை வழக்கை  தோண்டி எடுத்து தொடர்ந்து போராடி வருவதாகவும் கொலை வழக்கில் தவறு செய்தவர்களுக்கு நிச்சயமாக தண்டனை கிடைக்கும் என்றும் காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் தமிழ்நாட்டை பட்டாளி மக்கள் கட்சி ஆள வேண்டும் என்றும் அன்புமணி முதல்வராக வேண்டும் என்ற எண்ணத்தோடு வீடு, வீடாக, திண்ணை திண்ணையாக இளைஞர்கள் சென்று பிரச்சாரம் செய்யவேண்டும் என வலியுறுத்தினார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தனியாக பாமக போட்டியிட்ட போது வெறும் 23 லட்சம் வாக்குகளை பெற்று இருப்பதாகவும் ஆனால் 5.6 % வாக்குகளை பெற்று தமிழகத்தில் 3 வது பெரிய கட்சி என தலைவர் ஜி.கே.மணி சொல்வது  வெட்கமாகவும், வேதனையாக உள்ளதாகவும் தெரிவித்தார்.