ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா லத்தீஃப் தற்கொலை வழக்கு... சி.பி.ஐ. முன் ஆஜரானார் அவரது தந்தை...

சென்னை ஐ.ஐ.டி மாணவி பாத்திமா லத்தீஃப் தற்கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்கு அவரது தந்தை அப்துல் லத்தீஃப் சென்னை சி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார்.

ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா லத்தீஃப் தற்கொலை வழக்கு... சி.பி.ஐ. முன் ஆஜரானார் அவரது தந்தை...

சென்னை ஐ.ஐ.டி-யில் படித்து வந்த கேரளாவைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீஃப் கடந்த 2019 ஆம் ஆண்டு நவ.9 ஆம் தேதி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், இவ்வழக்கு விசாரணை சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. மேலும், மாணவி பாத்திமா லத்தீஃப் தனது தற்கொலைக்கு ஐ.ஐ.டி பேராசிரியர் சுதர்ஷன் பத்மநாபன் உட்பட மூவர் காரணம் என தனது செல்போனில் பதிவு செய்து வைத்திருந்த விபரங்களின் அடிப்படையில் 3 பேரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து ஐ.ஐ.டி மாணவி பாத்திமா லத்தீஃப் தற்கொலை வழக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு டிச.15 ஆம் தேதி சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதனடிப்படையில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிச.27 ஆம் தேதி சி.பி.ஐ குற்றவியல் நடைமுறைச் சட்டம் 174-ன் கீழ் இயற்கைக்கு மாறான மரணம் என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கினர். மாணவி பாத்திமா லத்தீஃப்-ன் செல்போன், லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்களை சி.பி.ஐ சைபர் ஆய்வகத்தில் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இரு ஆண்டுகளுக்குப் பின் சி.பி.ஐ விசாரணைக்காக, விசாரணை அதிகாரியான துணை கண்காணிப்பாளர் சந்தோஷ் குமார் சம்மனை ஏற்று மாணவி பாத்திமா லத்தீஃப்-ன் தந்தை அப்துல் லத்தீஃப் சென்னை பெசன்ட் நகரில் உள்ள சி.பி.ஐ சிறப்பு புலனாய்வு அலுவலகத்தில் நேரில் ஆஜராகியுள்ளார். 

விசாரணைக்கு ஆஜராகியுள்ள அப்துல் லத்தீஃபிடம் பாத்திமா இறுதியாக எப்போது இறுதியாக குடும்பத்தாரை தொடர்பு கொண்டார்? மாணவி குற்றஞ்சாட்டியுள்ள பேராசிரியர்களின் நடவடிக்கைகள் தொடர்பான முன்னரே மாணவி கூறியதுண்டா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை மாணவியின் தந்தையான அப்துல் லத்தீஃபிடம் விசாரணை அதிகாரி சந்தோஷ் குமார் தலைமையிலான சி.பி.ஐ அதிகாரிகள் கேட்டு அவற்றை வாக்குமூலமாக பதிவு செய்கின்றனர். கடந்த 2019 ஆம் ஆண்டு டிச.31 ஆம் தேதி அப்துல் லத்தீஃப் சி.பி.ஐ அதிகாரிகளை சந்திக்க அனுமதி கோரியபோது, அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.