ஐக்கிய அமீரகத்தில் மீதமுள்ள ஐ.பி.எல் போட்டிகள்... பிசிசிஐ தகவல்!!

ஐக்கிய அமீரகத்தில் மீதமுள்ள ஐ.பி.எல் போட்டிகள்... பிசிசிஐ தகவல்!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்ட ஐபிஎல், போட்டியானது வருகிற செப்டம்பர்- அக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவமனையில் படுக்கை வசதி இன்மை என மக்கள் கடும் திண்டாட்டத்திற்கு ஆளாகினர். இருப்பினும் ஒரு சில நகரங்களில் ஆண்டு தோறும் நடத்தப்படும் ஐபிஎல் 20-20 தொடர் நடந்து வந்தது. இதில் பங்கேற்ற வீரர்கள் கொரோனா பாதுகாப்பு வளையத்திற்கு வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு கட்டுப்பாடும் விதிக்கப்பட்டிருந்தன. ஆனால் வரிசையாக வீரர்கள் சிலருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக கொல்கத்தா அணி வீரர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியார், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் சாஹா, டெல்லி கேபிட்டல்ஸ் வீரர் அமித் மிஸ்ரா ஆகியோருக்கு கொரோனா உறுதியானது. சென்னை அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், பந்துவீச்சுப் பயிற்சியாளர் பாலாஜி ஆகியோருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. ரசிகர்களும் இந்த போட்டி மீண்டும் நடைபெறுமா என எதிர்பார்த்திருந்தனர். 

இந்தநிலையில் ஐபிஎல்லில் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த  போட்டிகளை வருகிற செப்டம்பர் 18ம் தேதி முதல்  அக்டோபர் 10ம் தேதி வரை நடத்த  சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.