ஒன்றிய அரசு என்றால் ஓ.பி.எஸ். ஏன் கதறுகிறார்..? விசிக எம்.எல்.ஏ. ஆளூர் ஷா நவாஸ் ட்வீட்!

ஒன்றிய அரசு என கூறினால் ஏன் ஓபிஎஸ் கதறுகிறார் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஒன்றிய அரசு என்றால் ஓ.பி.எஸ். ஏன் கதறுகிறார்..? விசிக எம்.எல்.ஏ. ஆளூர் ஷா நவாஸ் ட்வீட்!

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே ஒன்றிய அரசு என்ற சொல்லாடல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை பாஜக, அதிமுக ஆதரவாளர்கள் ஒருசேர எதிர்க்கின்றனர். மத்திய அரசு என்பதே சரியான சொற்பதம் என்று வாதிடுகிறார்கள். ஆனால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளோ, பல மாநிலங்கள் சேர்ந்தது தான் இந்திய ஒன்றியம். ஆகவே ஒன்றிய அரசு என்பதே அரசியலமைப்பு சட்டம் சொல்வது போல மிகச் சரியானது என்கின்றனர்.

 மத்திய அரசா, ஒன்றிய அரசா என்ற விவாதம் புயலைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் பாஜக எம்எல்ஏ நயினார் சட்டப்பேரவையில் கேள்வியெழுப்ப, அதற்கு விளக்கமளித்த முதலமைச்சர் ஸ்டாலின், மாநிலங்களின் ஒன்றியம் இந்தியா என்ற அரசமைப்பு சட்டத்தின் முதல் வரியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 ஒன்றிய அரசு என்ற சொல்லை கூட்டாட்சி தத்துவ அடிப்படையில் பயன்படுத்துகிறோம். அவ்வாறு கூறுவதைப் பார்த்து யாரும் மிரள தேவையில்லை. அதை சமூகக் குற்றமாக பார்க்கக் கூடாது. இனி எப்போதும் அப்படிதான் பயன்படுத்துவோம் என்றார்

இச்சூழலில் இன்று அறிக்கை வெளியிட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், ஒன்றிய அரசு என்று அழைக்கக் கூடாது என வலியுறுத்தியிருந்தார். அதில், தேசியத்திற்கு எதிரான செயல்கள் நடப்பதை பார்க்கும் போது தமிழ்நாடு திசைமாறி செல்கிறதோ என்ற எண்ணம் ஏற்படுகிறது.

 இந்திய அரசை ஒன்றிய அரசு என சொல்வது தாய் திருநாட்டை கொச்சைப்படுத்துவது போலாகும். மத்திய அரசை 'ஒன்றிய அரசு' என கூறி சிறுமைப்படுத்துவது மக்கள் நலன் பயக்கும் செயல் அல்ல. இந்திய நாடு பிரிக்க முடியாத ஒன்றிணைக்கப்பட்ட ஒரு தேசம். ஒன்றிய அரசு என கூறுவது நியாயம் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

 இந்த நிலையில் ஓபிஎஸ் அறிக்கைக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள விசிக எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ் UnionGovt என்று சட்டம் சொல்கிறது. UnionMinister என்று அமித்ஷா பெயர் பலகையிலும் உள்ளது. அதையே தமிழில் ஒன்றியஅரசு, ஒன்றியஅமைச்சர் என்கிறோம். இதற்கு ஏன் ஓபிஎஸ் கதறுகிறார்? என்றும்  பாஜக சொல்கேட்டு அதிமுகவை பிளந்தவர், பிறரை பிரிவினைவாதி என்கிறார். மகனை ஒன்றிய அமைச்சராக்க எதுவும் பேசுவார் என்று சராமரியாக விமர்சித்திருக்கிறார்.