தீபத்திருவிழா...அதிகாரிகளுக்கு அமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு...!

தீபத்திருவிழா...அதிகாரிகளுக்கு அமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு...!

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஒலிபெருக்கி மூலம் விளம்பரம் செய்தாலோ அல்லது உண்டியல் வைத்து வசூல் செய்தாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எ.வ வேலு தெரிவித்துள்ளார்.

தீபத்திருநாள்:

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 27ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக, வருகிற டிசம்பர் 6ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் கோவில் கருவறையில் பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து 2668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. இந்த விழாவை காண தமிழகம் மற்றும் வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்து தீப தரிசனம் செய்து கிரிவலம் வந்து வழிபடுவார்கள்.

ஆய்வுக்கூட்டம்:

இந்த நிலையில் இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ. வ. வேலு தலைமையில் திருக்கார்த்திகை தீப திருவிழா முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பா முருகேஷ் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்ட பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் குறித்தும் விளக்கினர். தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் அமைச்சரிடம் விளக்கி கூறினார்.  

இதையும் படிக்க: பாஜக VS காங்கிரஸ் VS ஆம் ஆத்மி: முடிவடைந்த தேர்தல் பிரச்சாரம்...சூடுபிடிக்க போகும் அரசியல் களம்!

அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட எவவேலு:

இதனைத் தொடர்ந்து பல்வேறு ஆலோசனை மற்றும் உத்தரவுகளை வழங்கிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, வருகிற டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் என்பதால், பாதுகாப்பு விவகாரத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும், மாவட்ட நிர்வாகத்தால் உரிய அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் மட்டுமே அன்னதானம்  வழங்க அனுமதிக்க வேண்டும் எனவும், அனுமதி இல்லாமல் அன்னதானம் வழங்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், கிரிவலப் பாதையின் புனிதம் கெடும் வகையில் வியாபாரம் நோக்கத்தோடு ஒலிபெருக்கி மூலம் விளம்பரம் செய்தாலோ அல்லது உண்டியல் வைத்து வசூல் செய்தாலோ அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ வேலு உத்தரவு பிறப்பித்தார்.