”15 மாதங்களில் பயன்பாட்டிற்கு வந்தது பன்னோக்கு மருத்துவமனை” - முதலமைச்சர் பெருமிதம்

”15 மாதங்களில் பயன்பாட்டிற்கு வந்தது பன்னோக்கு மருத்துவமனை” - முதலமைச்சர் பெருமிதம்

சென்னை கிண்டியில் பன்நோக்கு மருத்துவமனை பதினைந்து மாதங்களில் மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமைபட கூறியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, திமுக சார்பில் கருணாநிதி நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது. சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் இருந்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் மாரத்தான் போட்டியை  கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்த போட்டியில், பல்வேறு நாடுகளை சேர்ந்த 73 ஆயிரத்து 206 பேர் பங்கேற்றனா். இதில், சிறுவர்கள், பெரியவர்கள் மட்டுமல்லாது திருநங்கைகளும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இந்த போட்டிகள் 5 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர் தூரம் என 4 பிாிவுகளாக நடத்தப்பட்டன. 73 ஆயிரத்து 206 பேர் பங்கேற்ற இந்த மாரத்தான் போட்டி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

இதையும் படிக்க : கலைஞர் நூற்றாண்டு விழா மாரத்தான் போட்டி தொடங்கியது...!

பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார். 42 கிலோ மீட்டர் மாரத்தானில் முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாயும், இரண்டாவது பரிசாக 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சர் வழங்கினார்..

இதைத் தொடர்ந்து, மாரத்தான் போட்டியில் பங்கேற்ற திருநங்கைகள் ஆயிரத்து 63 பேரையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டினார். மேலும், தமிழ்நாடு அரசு சார்பில் அவர்கள் அனைவருக்கும் ஊக்கத்தொகையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

நிகழ்ச்சியின் நிறைவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பதினைந்தே மாதங்களில் சென்னை கிண்டியில் பன்நோக்கு மருத்துவமனை மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக பெருமைபட கூறினார்.