சென்னை மாநகராட்சியில்..! மக்களை தேடி மேயர்..!

சென்னை மாநகராட்சியில்..! மக்களை தேடி மேயர்..!
Published on
Updated on
2 min read

சென்னை மாநகராட்சியில் மக்களை நேரடியாக சந்தித்து மனுக்களை பெறும் வகையில் மக்களை தேடி மேயர் என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என இந்த நிதியா ஆண்டின் மேயர் பிரியா அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில் மக்களை தேடி மேயர் திட்டத்தின் முதல் சிறப்பு கூட்டம் சென்னை ராயபுரத்தில் உள்ள மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. இத்திட்டத்தின்படி, புகார் தெரிவிக்க வரும் பொது மக்கள், தங்களது பெயரை பதிவு செய்து ரசீது பெற்று கொண்ட பின்னர் மேயரை சந்திக்கவும், புகாரினை மாநகராட்சியில் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 

மேலும், மக்களை தேடி மேயர் திட்டத்தின் வாயிலாக பொதுமக்கள் தங்கள் பகுதி சார்ந்த அடிப்படை பிரச்சனைகள் குறித்தும், அவர்களுக்கு தேவையான உதவிகளை குறித்தும் மனுவாக வழங்கலாம் எனவும்,  மாநகராட்சி தொடர்பான உதவிகள், மற்றும் புகார்களை மாநகராட்சி ஏற்றுக்கொள்ளும் எனவும், மாநகராட்சி தொடர்பில்லாத மற்ற துறை புகார்கள் உரிய துறைக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த சிறப்பு முகாமில், மேயர் பிரியா ராஜன்,  அமைச்சர் சேகர்பாபு,  சட்டமன்ற உறுப்பினர் ஐ. ட்ரீம்ஸ் மூர்த்தி, மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சியின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து,  பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெற்றுக் கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த மேயர் பிரியா இந்த திட்டம் குறித்து பேசுகையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட கோரிக்கைகளை மக்கள் நேரிடையாக வழங்கலாம் எனவும், மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார். அதோடு, மனு பெறப்பட்டதற்கான ரசீது வழங்கப்படும் என்றும்,  சென்னை மாநகராட்சி வலைதளத்தில் அவர்கள் கொடுத்துள்ள மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிந்துகொள்ளலாம் எனவும் கூறினார்.  மேலும், மனுவின் நிலை மற்றும் அது எந்த அதிகாரியின் நடவடிக்கைக்கு கீழ்  உள்ளது என்பதையும்  அறிந்துகொண்டு அலுவலரை தொடர்பு கொள்ளவும் முடியும் எனவும் தெரிவித்தார்.  

தொடர்ந்து, இந்த திட்டம் 15 நாட்களுக்கு ஒரு முறை என அனைத்து மண்டலங்களிலும் செயல்படுத்தப்படும் எனவும், மனுக்களை பெறுவது மட்டுமின்றி, அதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்பட  வேண்டும் என்பதனால் 15 நாட்களுக்கு ஒரு முறை இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்றும் கூறினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com