
கடலூரில் உதவி ஜெயிலரை குடும்பத்துடன் தீ வைத்துக் கொளுத்த முயற்சி செய்த கைதி தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி
வருகின்றனர்.
கைதியிடம் இருந்து பொருட்களை கைப்பற்றிய உதவி ஜெயிலர்:
கேப்பர் மலைப்பகுதியில் உள்ள மத்திய சிறைச்சாலையில் 700க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். அங்கு உதவி ஜெயிலராக பணியாற்றி வந்த மணிகண்டன் என்பவர், கடந்த 8ம் தேதி நடத்திய சோதனையின்போது எண்ணூர் தனசேகரன் என்ற கைதியிடம் இருந்து ஆண்ட்ராய்டு போன், பேட்டரிகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றியுள்ளார்.
வீட்டிற்கு தீ வைக்க திட்டம்:
இதனால் ஆத்திரமடைந்த கைதி தனசேகரன், கொலை செய்து விடுவேன் என மணிகண்டனை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து, கைதி தனசேகரன் கூலிப்படையை வைத்து மணிகண்டன் வீட்டுக்கு தீ வைக்க திட்டம் தீட்டியதாகத் தெரிகிறது.
வீட்டிற்கு தீ வைப்பு:
தொடர்ந்து, சிறைச்சாலை அருகே உள்ள சிறைக்காவலர் குடியிருப்பில் அமைந்திருக்கும் உதவி ஜெயிலர் மணிகண்டன் வீட்டிற்கு சென்ற மர்மகும்பல், பெட்ரோல் பாட்டில் வீசி வீட்டுக்கு தீ வைத்துச் சென்றனர். ஆனால், உதவி ஜெயிலர் வீட்டில் அனைவரும் உடனடியாக வெளியேறியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.