இலவச சைக்கிள் ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை!

இலவச சைக்கிள் ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை!

Published on

தமிழ்நாடு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் சைக்கிள்களை விநியோகம் செய்யும் ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரித்துறையினர் இரண்டாவது நாளாக இன்றும் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு அரசு இலவச மிதிவண்டி திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சைக்கிள்கள் தனியார் நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்ததாரர் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டும் மாணவர்களுக்கு சைக்கிள்கள் விநியோகம் செய்வதற்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட சைக்கிள்கள் குறிப்பிட்ட ஒரு ஒப்பந்ததாரரிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

ஏவான் என்கிற சைக்கிள் நிறுவனத்தின் தமிழ்நாடு டீலராக இருப்பவர் சுந்தர பரிபூரணம், இவர் இந்த ஆண்டுக்கான சைக்கிள் விற்பனையை டெண்டர் எடுத்துள்ளார். இதில் ஒரு சைக்கிளுக்கு உற்பத்தி செய்து விற்கப்படும் விலையை விட பல ஆயிரம் ரூபாய் மதிப்பு அதிகம் காட்டி தமிழ்நாடு அரசுக்கு  விற்பனை   செய்ய முயற்சி நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

குறிப்பாக இதே போன்று இலவச மிதிவண்டி திட்டத்தை பின்பற்றி வரும் மற்ற மாநிலங்கள், பஞ்சாப்பில் உள்ள ஏவான் சைக்கிள் நிறுவனத்தின் நேரடி உற்பத்தி தொழிற்சாலையில் இருந்து சைக்கிள்களை வாங்கும் பொழுது குறைந்த விலைக்கு வாங்கி அரசுக்கு மிக அதிக விலைக்கு வழங்கி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தமிழ்நாடு அரசு சுந்தர பரிபூரணம் போன்ற  டீலர் மூலமாக ஒப்பந்த அடிப்படையில்  சைக்கிளை வாங்குவதால் அரசிற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகும் குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் சுந்தர பரிபூரணம் கடந்த  ஆட்சி காலத்திலும் இதே போன்று சைக்கிள் டெண்டர் எடுத்து அதிக  விற்பனை செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு சைக்கிள் டீலராக உள்ள சுந்தர பரிபூரணத்தின் மீது வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் வருமானவரித்துறையினர் நேற்று சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள இவரது இல்லத்தில் சோதனை நடத்த சென்றனர். இதைத் தொடர்ந்து இன்று காலையும் மீண்டும் ஆய்வு செய்ய சென்றுள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com