தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு...ஓட்டுநா்கள், உதவியாளா்களுக்கு ஆட்சியர் அறிவுரை!

தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு...ஓட்டுநா்கள், உதவியாளா்களுக்கு ஆட்சியர் அறிவுரை!

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் பள்ளி வாகனங்களின் தரம் குறித்த சோதனை நடைபெற்று வருகிறது. 

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பள்ளி திறப்புக்கு முன்னதாக, தனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து ஆய்வு செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து எல்லைக்கு உட்பட்ட 31 பள்ளிகளை சேர்ந்த 369 வாகனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் கௌசல்யா, வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன் உள்ளிட்டோா் வாகனங்களை ஆய்வு செய்தனா். முதற்கட்டமாக 223 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு, அதில் 23 வாகனங்களில் குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டு மறு ஆய்வுக்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க : ”கூர்வாளால் சாதிக்க முடியாததை...பேனா முனையால் சாதிக்க முடியும் என்று காட்டியவர்” - சி.பா.ஆதித்தனாரின் நினைவு தினம்!

இதேபோல் காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து எல்லைக்கு உட்பட்ட காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் 44 தனியார் பள்ளிகளின் 250 பேருந்துகள் மற்றும் வேன்களை ஆய்வு செய்யும் சிறப்பு முகாம் காஞ்சிபுரம் அடுத்த திம்மசமுத்திரம் தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. வட்டார போக்குவரத்து அலுவலர் தினகரன் உள்ளிட்டோா் வாகனங்களில் இருக்கைகள், முதலுதவி பெட்டிகள் உள்ளிட்டவை குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் 178 தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் பாத்திமா உள்ளிட்ட அதிகாாிகள் பங்கேற்று பேருந்துகளில் அவசர வழி, முதலுதவி பெட்டி உள்ளிட்டவைகள் சரியாக உள்ளதா என ஆய்வு செய்தனர். மேலும் ஒட்டுநர் மற்றும் உதவியாளர்களுக்கு ஆலோசனை வழங்கினர்